Marrying Self : தன்னையே திருமணம் செய்துகொள்ளப்போகும் இந்தியப் பெண்.. காரணம் இதுதான்..
திருமண ஏற்பாடுகள் மும்முரம்; கோவாவில் தேன்நிலவு;ஆனால் மணமகன் இல்லையாம்!
திருமணம் என்பது இருமனம் இணைதல்; வாழ்வின் ஒரு அங்கம்; இப்படி சொல்லப்பட்டாலும், வாழ்க்கையின் அடுத்த நொடி நமக்கு வழங்கும் ரகசியங்கள் வியப்பில் ஆழ்த்துகிறது. இரண்டு பேர் இருந்தால்தான் ஒரு குடும்பமா? என்ன? தனியொருத்தியும்/ தனிவொருவனும் குடும்பம் ஆகிவிட முடியாதா? நம் எல்லோருக்கும் திருமணம் பற்றி நிறைய கனவுகள் இருக்கும். வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்ப்பார்ப்புகளும் இருக்கும். ஆனால், இதெல்லாம் இல்லாமல், குஜராத் பெண் ஒரு தன்னையே மணந்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஏன், என்னவென்று தெரிந்துகொள்வோமா?
குஜராத் மாநிலம் வடோதராவைச் சேர்ந்த ஷமா பிந்துவுக்கு (Kshama Bindu) வரும் ஜூன் 11 ஆம் தேதி கல்யாண நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. ஒரு திருமணத்திற்கு என்னெல்லாம் தேவையோ அதெல்லாம் தயாராகி வருகிறது. மெஹந்தி, இசை கச்சேரி, மேடை அலங்காரம், அழைப்பிதழ், மணப்பெண்ணின் பிரத்யேக ஆடை உள்ளிட்டவைகள் எல்லாம் இடம்பெறுகின்றன. ஆனால், இந்த திருமணத்தில் மணமகன் மட்டும் மிஸ்ஸிங். ஆமாங்க. பிந்துவுக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லையாம். ஆனால், அவருக்கு மணப்பெண் கோலத்தில்தான் இருக்க வேண்டும் என்ற ஆசை, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கான திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார் பிந்து.
இவருடைய திருமணம் பாரம்பரிய முறைப்படி நடக்க இருக்கிறது. குஜராத்தில் முதன்முறைய இப்படி ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. ( first self-marriage or sologamy). இதற்காக பிந்து ஆன்லைனில் இதுபோன்ற திருமணம் செய்துகொண்டுள்ளாரா என்று தேடிப்பார்த்துள்ளார்.
இது குறித்து பிந்து கூறுகையில், ‘எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. ஆனால் நான் மணப்பெண்ணாக இருக்க ஆசைப்பட்டேன். அதனால், நான் என்னை திருமணம் செய்ய முடிவெடுத்தேன். முதலில் உங்களை நீங்கள் காதலிக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக என் செயலை காண்கிறேன். நான் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பேன் என கருதுகிறேன். ஒருவர் தன்னையே மணந்துகொள்வது என்பது, வாழ்நாள் முழுவதும் தன்னை முழுவதுமாக நேசிக்கவும், உறுதுணையாக இருக்கவும் உறுதி ஏற்பதாகும். ஒருவர் மீது காதல் மலர்வதால், அவரை திருமணம் செய்துகொள்வார்கள். நான் என்னைக் காதலிக்கிறேன்; ஆகையால், நான் என்னை திருமணம் செய்துகொள்ளபோகிறேன்.” என்றார்.
இதன் மூலம் பெண்களின் உணர்வுகள், விருப்பங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிடுவதாக கூறுகிறார் பிந்து.
இவருடைய திருமணத்தில் பிந்துவின் பெற்றோர்கள், அவர் முடிவை ஏற்றுக்கொண்டவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பிந்து தேன்நிலவுக்கு கோவா செல்ல திட்டமிட்டிருக்கிறார். ’என் பெற்றோர் எனது திருமணத்தை ஆசீர்வதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். என் மகிழ்ச்சியே தங்களது மகிழ்ச்சி என்று தெரிவித்து என் முடிவுக்கு மகிழ்ச்சியடைந்துள்ளனர். என்று கூறியுள்ள பிந்து திருமணத்தின்போது எடுத்துக்கொள்வதற்காக 5 உறுதிமொழிகளை எழுதி வைத்திருக்கிறார்.
வாழ்த்துகள் பிந்து.