Vachathi case: வாச்சாத்தி வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி- குற்றவாளிகள் 6 வாரத்தில் சரணடைய உத்தரவு
வாச்சாத்தி வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐஎஃப்எஸ் அதிகாரி நாதன் மற்றும் எஸ்.பாலாஜி ஆகிய மனுதாரர்கள் 6 வாரத்தில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாச்சாத்தி வழக்கில் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐஎஃப்எஸ் அதிகாரி நாதன் மற்றும் எஸ்.பாலாஜி ஆகிய மனுதாரர்கள் 6 வாரத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடந்தது என்ன?
1990களில் சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பலமணி நேரத் தேடுதல் வேட்டையை நடத்தினர். இதன் முடிவில், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைது செய்தனர். அவர்களில் 90 பேர் பெண்கள், 28 குழந்தைகள் அடக்கம்.
அதேசமயம், சந்தனக் கட்டை கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வாச்சாத்தி கிராமத்தினர், இந்த விசாராணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தனர்.
கிராம மக்கள் அனைவரும் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தினர். இந்த புகார்களை அன்றைய மாநில அரசு ஆரம்பத்தில் மறுத்தது. தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி முறையான புகார் பதிவு செய்யப்பட்டது.
இதில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட விசாரணை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி அறிவித்தார். இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், தண்டனையை உறுதி செய்தார். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குடும்பத்துக்குத் தரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
மேல்முறையீட்டு மனுத் தாக்கல்
சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி வனத்துறை அதிகாரி சிதம்பரம் 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல இந்த வழக்கில் முதன்மையான குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற இந்திய வனத்துறை அதிகாரி (ஐ.எஃப்.எஸ்.) எல்.நாதன் தனது தண்டனையை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தார். நாதனின் மேல்முறையீட்டு மனு இன்று (திங்கட்கிழமை) நீதிபதி கே.விஷ்வநாதன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. அதேபோல, முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐஎஃப்எஸ் அதிகாரி நாதன் மற்றும் எஸ்.பாலாஜி ஆகிய மனுதாரர்கள் 6 வாரத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அடுத்தது என்ன?
இனி குற்றவாளிகள் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம். அல்லது சிறை தண்டனை அனுபவித்து, பிணை தாக்கல் செய்யலாம் அல்லது நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோரலாம். இதைத்தவிர பெரிதாக வேறு வாய்ப்பு ஏதும் இல்லை.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில், பலகட்டமாக விசாரணை நடைபெற்று, தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் இறுதியாக உச்ச நீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.