Uttarakhand receptionist murder:இளம்பெண் கொலை !மூத்த பாஜக தலைவரின் மகன் கைது! - ரிசார்ட்டை தகர்த்த அரசு!
பாஜக தலைவரின் மகன் என்பதால் வழக்கில் தொய்வு இருந்ததாகவும் , ரிசார்ட் உரிமையாளரை விசாரிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலானது.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் மூத்த பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் மகன் புல்கித் ஆர்யா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவர்களுக்கு சொந்தமான ரிசார்ட்டின் உரிமத்தை ரத்து செய்து , அதனை இடிக்க அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் , வனந்தரா பகுதியில் , அம்மாநில மூத்த பாஜக தலைவரின் மகன் புல்கித் ஆர்யா ரிசார்ட் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த ரிசார்ட்டில் அந்த பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் , வரவேற்ப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி வேலை முடித்து வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர்கள் தங்களது மகளை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதே நேரம் ரிசார்ட் உரிமையாளரான புல்கித் தரப்பிலிருந்தும் புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. பாஜக தலைவரின் மகன் என்பதால் வழக்கில் தொய்வு இருந்ததாகவும் , ரிசார்ட் உரிமையாளரை விசாரிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலானது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், புல்கித் ஆர்யாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். புல்கித் ஆர்யா முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறியிருக்கிறார். சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் , அந்த பெண் ரிசார்ட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பது உறுதியாக தெரிந்தது.
இதனையடுத்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியதில் , புல்கித் ஆர்யா, ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகிய மூவரும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி , கொலை செய்து , அருகில் உள்ள நீர்நிலைகளில் வீசியது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் இளம்பெண்ணை சித்திரவதை செய்து அந்த ஆடியோவை பதிவு செய்ததாகவும் , பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டுகிறார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து புல்கித் ஆர்யாவிற்கு சொந்தமான ரிசார்ட் உரிமையை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து அந்த ரிசார்ட் முதல்வரின் சிறப்பு முதன்மை செயலாளர் அபினவ் குமார் தலைமையில் இடிக்கப்பட்டது. மேலும் மாநிலத்தின் அனைத்து ரிசார்ட்டுகளையும் விசாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
குற்றவாளியான புல்கித் ஆர்யாவின் தந்தை , வினோத் ஆர்யா உத்தரகாண்ட் மாட்டி கலா வாரியத்தின் தலைவராக மாநில அமைச்சர் அந்தஸ்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

