உபியில் பாஜக பிரமுகர் மகன் கார் மீது வெடிகுண்டு வீச்சு: சிசிடிவி காட்சிகள் வெளியானது
உத்தாரப்பிரதேச மாநிலத்தில் பாஜக பிரமுகர் மகன் கார் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உத்தாரப்பிரதேச மாநிலத்தில் பாஜக பிரமுகர் மகன் கார் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் மாவட்டத்தில் இன்று இந்த சம்பவம் நடந்தது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. நல்வாய்ப்பாக காரில் இருந்த பாஜக தலைவர் மகனும் அவரது நண்பரும் மயிரிழையில் உயிர் பிழைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில், பாஜக பிரமுகர் விஜயலக்ஷ்மி சண்டேல். இவரது மகன் விதான். இவருக்கு 20 வயதாகிறது. இவர் கடந்த வியாழக்கிழமை இரவு அவரது தாய்மாமன் வீட்டிற்கு காரில் சென்றார். அப்போது அவர் சென்ற சஃபாரி கார் பிரயாக்ராஜ் மாவட்டம் ஜூஷி பகுதியில் வந்தபோது பைக்கில் வந்த ஆறு இளைஞர்கள் காரை வழிமறித்துள்ளனர். இதில் ஒரு காவலர் மகனும் இருந்ததாகத் தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை யூகிக்கும் முன்னர் அந்த இளைஞர்கள் கார் மீது குண்டுகளை வீசியுள்ளனர். ஆனால் நல்வாய்ப்பாக விதானும் அவருடன் இருந்த நபரும் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பாக சாண்டேல் ஜூஷி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மாவட்ட பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவரது மகனை நோக்கி நடத்தப்பட்ட இத்தாக்குதல் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிசிடிவி கேமரா காட்சிகளின்படி குண்டு வீச்சில் கார் பலத்த சேதமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விதானுக்கும் காரில் குண்டு வீசியவர்களில் ஒருவரான சிவம் யாதவுக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. சிவம் யாதவ், போலீஸ் கான்ஸ்டபிளின் மகன். அவரது தந்தை ஷிவ் பச்சன் யாதவ் கவுசாம்பியில் வேலை செய்கிறார். இந்நிலையில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் ஷிவ் பச்சன் யாதவும் அவரது மகன் ஷிவம் யாதவும் பாஜக பிரமுகர் விஜயலக்ஷ்மி சண்டேல் வீட்டுக்குச் சென்று அவரிடம் மன்னிப்பு கோடியுள்ளனர். இருப்பினும் சண்டேல் இந்த வழக்கில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. தன் மகனை கொலை செய்யும் முனைப்பில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் புகார் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
உத்தரப்பிரதேசத்தில் வன்முறைச் சம்பவங்களுக்கு எப்போதுமே குறைவில்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் அதிகமாக இருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன.
உனாவ் சம்பவம், ஹத்ராஸ் சம்பவம் போன்ற பல்வேறு வன்கொடுமை சம்பவங்கள் இவற்றிற்கு ஒரு சாட்சியாக சொல்லலாம்.
உத்தரப்பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.