PM Modi & President Biden: நாளை தொடங்கும் ஜி20 மாநாடு.. இன்று பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் சந்திப்பு..
ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வரும் நிலையில் இன்று மாலை பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் இடம்பெற்றுள்ள, ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, அந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேநேரம், டெல்லியில் மாநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெல்லி மாவட்டம் முழுவதும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில், நாளை முதல் பொதுமக்களுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. அதேநேரம், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், நைஜீரியாவின் அதிபர் போலா டினுபு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நாளை மாநாடு தொடங்க இருக்கும் நிலையில், டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் டெல்லியில் பல இடங்களையும் சுற்றிப் பார்க்க உள்ளதால் 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் வெளிநாட்டு தலைவர்கள் தங்கும் விடுதிகள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன. அந்த விடுதிகளின் நுழைவு வாயில்கள் முன் உள்ள சாலைகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தின் முன்புற ரோடும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்படி தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
US President Biden departs for India to attend G20 Summit
— ANI Digital (@ani_digital) September 7, 2023
Read @ANI Story | https://t.co/VxUsWKetLq#Biden #India #US #G20Summit pic.twitter.com/FI8rt9UTAZ
கடந்த சில தினங்களுக்கு முன் ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வரும் திட்டத்தில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பரிசோதனையின்போது தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியான நிலையில் இன்று காலை அமெரிக்காவில் இருந்து மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டார்.
இன்று மாலை டெல்லி வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். தூய்மையான எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.