MQ-9B Armed Drones: இந்திய வான்பரப்பின் புதிய ”காப்பான்” - ரூ.33,000 கோடி மதிப்பு, MQ-9B டிரோன்களின் சிறப்பம்சங்கள் என்ன?
MQ-9B Armed Drones: MQ-9B எனப்படும் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய, அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
MQ-9B Armed Drones: அமெரிக்காவிடமிருந்து MQ-9B எனப்படும் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை, 33 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது.
கண்காணிப்பு டிரோன்கள்:
வான் பரப்பை கண்காணிப்பதற்கான MQ-9B டிரோன்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு தேவையான சான்றிதழை வழங்கியதை அடுத்து, டிரோன் விற்பனை உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, 31 MQ-9B ஸ்கை கார்டியன் டிரோன்களை வாங்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில், அதற்கு கிடைத்துள்ள ஒப்புதல், இருநாடுகளின் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய அடையாளமாகும்.
அமெரிக்கா நம்பிக்கை:
இந்த விற்பனையானது, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களை ஆதரிப்பதோடு, அமெரிக்க-இந்திய மூலோபாய உறவை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதிக்கான முக்கிய சக்தியாக தொடர்ந்து இருக்கும் நட்பு நாடான இந்தியாவின் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. கடல் பாதைகளில் ஆளில்லா கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளை செயல்படுத்துவதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறன் மேம்படும். இந்தியா தனது ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது” என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MQ-9B ஆயுதமேந்திய ஆளில்லா டிரோன்கள்:
அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் மூலம் இந்த ஆளில்லா டிரோன் விமானம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் கொள்முதல் என்பது அரசு-அரசாங்க ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். அந்த வகையில் இந்தியா 33 அயிரம் கோடி ரூபாய் செலவில், 31 MQ-9B டிரோன்களை வாங்க உள்ளது. அதில் இந்திய கடற்படைக்கு 15 சீ கார்டியன் டிரோன்களும், ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தலா எட்டு ஸ்கைகார்டியன் டிரோன்களும் கிடைக்க உள்ளன.