Covid Vaccine: அதிகரிக்கும் பயம் - கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இலவச இருதய பரிசோதனை - அகிலேஷ் யாதவ் கோரிக்கை
Covid Vaccine Issue: கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம் என, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Covid Vaccine Issue: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, இலவச இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அகிலேஷ் யாதவ் கோரிக்கை வைத்துள்ளார்.
அகிலேஷ் யாதவ் கோரிக்கை:
சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், கொரோனா தடுப்பூசியால் நாட்டு மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஈசிஜி போன்ற இதயம் தொடர்பான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். அவரது மனைவியும், சமாஜ்வாதி கட்சி வேட்பாளருமான டிம்பிள் யாதவை ஆதரித்து மைன்புரியின் கிஷ்னியில் நடந்த பேரணியில் உரையாற்றிய அகிலேஷ், “அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை, அவர்களின் (மத்திய அரசின்) முடிவால் உங்கள் (மக்கள்) உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. கொரோனா காலத்தில் இந்த அரசு தடுப்பூசி போட்டது மற்றும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து நன்கொடை பெற்றது எப்படி என்பது அனைவருக்கும் தெரியும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது அச்சத்தால் தங்கள் இதயத்தை பரிசோதிக்க மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள்.
ஆபத்தில் மக்கள் உயிர் - அகிலேஷ்:
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ECG போன்ற இதயம் தொடர்பான அனைத்து சோதனைகளும் இலவசமாக செய்யப்பட வேண்டும். இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தங்கள் இதயத்தை இலவசமாக பரிசோதிக்கும் வசதியைப் பெறலாம். பாஜக தலைவர்கள் நாட்டு மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
அரசியல் சாசனம் நிலைத்திருந்தால் மட்டுமே ஜனநாயகம் நிலைத்திருக்கும். அரசியலமைப்புச் சட்டம் இருந்தால்தான் மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படும். அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாஜகவிடம் இருந்து காப்பாற்றுவதற்காக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. பாஜக வீழ்த்தப்பட்டால் பணவீக்கம் குறையும், வேலையில்லா திண்டாட்டமும் குறையும். மக்கள் வீடுகளில் வளம் பெருகும். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து, பொதுமக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது” என அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார்.
தடுப்பூசியால் பக்க விளைவுகள்:
சமீபத்தில், இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா, கொரோனா தடுப்பூசியை ஐரோப்பாவில் வாக்ஸ்செவ்ரியா என்றும் இந்தியாவில் கோவிஷீல்ட் என்றும் விநியோகம் செய்தது. இந்தியாவில் பெரும்பலானோர் கோவிஷீல்ட் தடுப்பூசியை தான் செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் தான், அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு "மிகவும் அரிதான நிகழ்வாக", இரத்த உறைதல் தொடர்பான பக்கவிளைவுகள் ஏற்படலாம்” என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்தே பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தான், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இலவச இருதய பரிசோதனை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என, அகிலேஷ் யாதவ் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.