Sabarimalai: ‘சபரிமலையில் விரைவில் விமான நிலையம்’ ... அனுமதி வழங்கியது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்..
சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதேபோல் சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளிலும் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை கோயில் நடையானது ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பில் இருந்து சில நாட்களும், கார்த்திகை, மார்கழி மாதங்கள் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும்.
இந்த கோயிலும் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற வயதினரும் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இப்படியான நிலையில் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களை கூட்டத்தை கருத்தில் கொண்டு இதனை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்லும்
வண்ணம் விமான சேவை சபரிமலையில் தொடங்கப்பட உள்ளது. 2,250 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,000கோடி செலவில் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கேரள அரசு மத்திய அரசின் பல்வேறு துறைகளிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. இதில் பாதுகாப்புத்துறை, மத்திய விமான போக்குவரத்து துறையும் ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பத்தப்பட்டுள்ளதோடு பிற துறைகளின் அனுமதியும் அடுத்தடுத்து கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தது.
விமான நிலைய கட்டுமான பணிகளை கேரள அரசின் தொழில் வளர்ச்சி கழகம் மேற்கொள்ள உள்ளது. முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து விமான நிலையம் 48 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் விரைவில் சபரிமலையில் விமான நிலையம் அமைய உள்ளதை எண்ணி பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.