Amit Shah Birthday: பயோ-கெமிஸ்ட்ரி பட்டதாரி முதல் உள்துறை அமைச்சர் வரை..! 59 வயதில் அடியெடுத்து வைக்கும் அமித்ஷா..!
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 59ஆவது வயதில் இன்று அடியெடுத்து வைக்கிறார்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா. இன்று 59வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமித் அனில் சந்திர ஷா என்பது இவரது முழு பெயர். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் 1964-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி பிறந்தார். குஜராத் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்தார். இவரது தந்தை அனில் சந்திரஷா பிவிசி பைப் தொழிலில் ஈடுபட்டுவந்தார். பின்னர், அவரது தந்தையின் தொழிலுக்கு உதவி வந்தார்.
பங்குத்தரகராகவும், அகமதாபாத் நகரில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலும் இவர் பணிபுரிந்து இருக்கிறார். இளம் வயது முதலே அமித் ஷா, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டுவந்தார். பின்னர் கல்லூரி காலத்தில் முறையாக விருப்பார்வத் தொண்டராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் செயல்படத் தொடங்கினார்.
அகமதாபாத் ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் பிரதமர் மோடியை 1982ம் ஆண்டில் முதல் முறையாக அமித்ஷா சந்தித்தார். அந்த சமயத்தில் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக செயல்பட்டு வந்தார். ஆர்.எஸ்.எஸ். மாணவர் அணித் தலைவரான அமித்ஷா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவராக 1983ம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை அமித் ஷா தொடங்கினார்.
பா.ஜ.க.வில் 1987ஆம் ஆண்டு அமித்ஷா இணைந்தார். பிரதமர் மோடி 1988ம் ஆண்டில் தான் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
பா.ஜ.க.வில் அமித்ஷா இணைந்த பிறகு, அக்கட்சியின் இளைஞரணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் முக்கியப் பங்காற்றினார். அந்தப் பிரிவில் வார்டு செயலாளர், தாலுக்கா செயலாளர், மாநிலச் செயலாளர், துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் 1991-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக எல்.கே.அத்வானிக்காக பிரசார மேலாளராக அமித் ஷா செயல்பட்டார். குஜராத்தில் 1995ம் ஆண்டில் பா.ஜ.க. முதல் முறையாக ஆட்சி அமைத்தது. கேஷுபாய் படேல் முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது குஜராத்தில் காங்கிரஸ் தான் பிரதான கட்சியாக இருந்து வந்தது. அப்போது மோடியும், அமித் ஷாவும் தான் இணைந்து பணிபுரிந்து பல்வேறு உத்திகளை வகுத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த காரணமாக இருந்தனர்.
மேலும் படிக்க : குஜராத்தில் விரைவில் விமான தயாரிப்பு... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!
பின்னர் படிப்படியாக தனது கடின உழைப்பால் உயர்ந்து இன்று பா.ஜ.க.வில் சக்திவாய்ந்த தவிர்க்க முடியாத தலைவராகத் திகழ்கிறார் அமித் ஷா என்றால் அது மிகையல்ல.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், "அமித் ஷா ஜிக்கு பிறந்த தின வாழ்த்துகள். உள்துறை அமைச்சராக நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணிலடங்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். முக்கியமான கூட்டுறவுத் துறையை சீர்திருத்துவதில் பாராட்டுக்குரிய பணிகளையும் செய்து வருகிறார். அவர் நம் தேசத்தின் சேவைக்காக நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்றார்.