Covid-19 Death Guidelines : கொரோனா நிதியுதவி, கொரோனா இறப்பு பதிவுக்கான வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
கொரோனா நோய்த்தொற்றுடன் தொடர்பு இருந்தாலும் தற்கொலை, கொலை, விபத்துகள் போன்ற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் கொரோனா இறப்புகளாக கருதப்பட மாட்டாது
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவிட்-19 தொடர்பான இறப்புகளுக்கு தேவையான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வழங்குதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு இந்த வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
கொரோனா பாதிப்பு என்றால் என்ன? வழிகாட்டுதல்களின் படி, ஆர்டி-பி.சி.ஆர் சோதனை/ மூலக்கூறு சோதனை/ ரேபிட் ஆன்டிஜென் சோதனை மூலம் கண்டறியப்பட்ட பாதிப்புகள் அல்லது மருத்துவமனைகளில் முறையாக மதிப்பிடப்பட்ட பாதிப்புகள் அல்லது உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவர்கள் கொரோனாத் தொற்று நோயாளிகாக கருதப்படுவார்கள்
கொரோனா இறப்பு என்றால் என்ன? பெரும்பாலான கொரோனா இறப்புகள் தொற்று உறுதி செய்யப்பட்ட 25 நாட்களுக்குள் நிகழ்கிறது என்ற ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா உயிரிழப்புகளை மிகச் சரியாகப் பதிவு செய்யும் நோக்கில் மத்திய அரசு இந்த காலளவை தற்போது நீட்டிடுதுள்ளது.
வழிகாட்டுதல்களின் படி, " கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட தேதியில் இருந்து (அல்லது) மருத்துவ ரீதியாக கொரோனா பாதிப்பு என மதிப்பிடப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் ஏற்பட்ட உயிரிழப்பு கொரோனா இறப்பாக கருதப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதைத் தவிர, "கொரோனா பெருந்தொற்றில் இருந்து குணமடையாத நோயாளிகள் வீடு அல்லது மருத்துவமனை அமைப்புகளில் உயிரிழந்து, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969 பிரிவு 10-ன் கீழ், இறப்புக்கான காரணங்களுடன் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதும் கொரோனா இறப்பாகக் கருதப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா நோய்த் தொற்றுடன் தொடர்பு இருந்தாலும் தற்கொலை, கொலை, விபத்துகள் போன்ற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் கொரோனா இறப்புகளாக கருதப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிமுறைகள் முக்கியத்துவம் பெறுவது ஏன்? பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்று தமிழக அரசும், அந்தக் குழந்தைகளின் 23-ஆவது வயதில் ரூ.10 லட்சம் கிடைக்கும் வகையில் வைப்பீடு செய்யப்படும் என்று மத்திய அரசும் அறிவித்துள்ளன. இவை தவிர மாத நிதியுதவி, கல்வி உதவி உள்ளிட்ட மேலும் பல உதவிகளும் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இத்தகைய உதவிகளை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பெற வேண்டுமானால், அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலில் தான் உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா இறப்புகளை வகைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.
முன்னதாக, கோவிட் -19 அல்லது அது தொடர்பான பிரச்னைகளால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கோரி இரண்டு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றம் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோவிட்-19 தொடர்பான இறப்புகளுக்கு தேவையான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வழங்குதல் தொடர்பான வழிமுறைகளை ஏன் வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தது.
கொரோனா இறப்பு எண்ணிக்கை: முன்னதாக, இந்தியாவில் கொரோனா இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்தியாவில் ஏற்பட்ட இரண்டு கொரோனா அலைகளில் 2.7 முதல் 3.3 மில்லியன் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டதாக, மெட்ரிவிக்ஸ் இணையதளத்தில் ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. அதில் மூன்று வெவ்வேறு விதமான தரவுகளை மேற்கோள்காட்டி, ஒரு ஆண்டில் குறைந்தது 27 சதவீத உயிரழப்புகள் அதிகமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், அந்த அறிக்கையில், இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட அளவைவிட 7 முதல் 8 மடங்கு அதிகம் இருக்கலாம் எனவும் இந்த கூடுதல் இறப்புகள் எல்லாம் கோவிட் உயிரிழப்புகளாக இருக்க வாய்ப்புள்ளது என கூறியிருந்தது.
இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இறப்புகள் பதிவில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, கோவிட்-19 தொடர்பான இறப்புகளை, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த ICD-10 விதிமுறைப்படி சரியாக பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ளது. மேலும், மாநிலங்கள் அளிக்கும் தகவல்களைத் தவிர, நாட்டில் உள்ள சிவில் பதிவு முறை (சிஎஸ்ஆர்) அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்கிறது. இது தொடர் பணி என்பதால், இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, இதன் முடிவுகள் அடுத்தாண்டு வெளியிடப்படும்.
கோவிட் 2-ஆம் அலை உச்சத்தில் இருந்தபோது, கோவிட் சிகிச்சை மேலாண்மையில் கவனம் செலுத்தப்பட்டதால், கோவிட் உயிரிழப்புகளை சரியாகப் பதிவு செய்வது தாமதமாகியிருக்கலாம். பின்னர் இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் சரிசெய்யப்பட்டது. இறப்பு பதிவு முறை இந்தியாவில் வலுவாக உள்ளதால், இறப்பு பதிவுகள் தவறுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தது.
மேலும், வாசிக்க: