மாணவர்களை காவு வாங்கும் நுழைவு தேர்வுகள்.. ஒரே ஆண்டில் 22-வது தற்கொலை.. என்னதான் நடக்கிறது?
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
மாணவர்களை காவு வாங்கும் போட்டி தேர்வுகள்:
இளங்களை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெற்ற பிறகும், அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில், நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இம்மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதில்லை வெளிமாநிலங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகளில் சேர்வதற்கு நுழைவு தேர்வுக்கான முன்னணி பயிற்சி மையங்கள் கோட்டாவில்தான் அமைந்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள், கோட்டாவில் உள்ள பயற்சி மையங்களில் சேர்ந்து, நுழைவு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால், மன அழுத்தம் காரணமாகவும் தேர்வில் பயற்சி பெற முடியாத காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
ஒரே ஆண்டில் 22ஆவது தற்கொலை:
இந்த நிலையில், கோட்டாவில் இன்று மேலும் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் ஒருவரான அவிஷ்கர் சுபாங்கி, நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட மற்றொரு மாணவர் பீகாரைச் சேர்ந்த ஆதர்ஷ்.
இந்தாண்டு மட்டும் 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து விவரித்த காவல்துறை தரப்பு, "மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவிஷ்கர் சுபாங்கி கோட்டாவில் தனது தாத்தா பாட்டியுடன் தங்கியிருந்தார். தேர்வுக்கு பிறகு பயிற்சி நிறுவனத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மாலையில் ஆதர்ஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர்" என தெரிவித்தது.
கோட்டாவில் என்னதான் நடக்கிறது?
கொரோனா பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு தற்கொலைகள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. பெருந்தொற்று காலத்தில், மிகக் குறைவான எண்ணக்கையிலேயே மாணவர்கள் இறந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், 12 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு, 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு, 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
கடந்த வாரம், காய்ச்சல் காரணமாக 15 மாத்திரைகளை தவறாக உட்கொண்டதாக மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக அவரது நண்பர் கூறியிருந்தார். போட்டி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.