US Trump Tariff: இந்தியா மேல என்னயா காண்டு உனக்கு.. ரூ.77,000 கோடிக்கு ஆப்படித்த ட்ரம்ப் - மருந்துகளுக்கு 100% வரி
US Trump Tariff: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மருந்து பொருட்கள் மீது விதித்த 100 சதவிகித வரியால், இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடும் இழப்பை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

US Trump Tariff: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ப்ராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு, 100 சதவிகித வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மருந்துகளுக்கு 100% வரி
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ப்ராண்டட் அல்லது காப்புரிமை பெறப்பட்ட மருந்து பொருட்கள் மீது, அக்டோபர் 1ம் தேதி முதல் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உள்நாட்டில் உற்பத்தி ஆலைகள் இல்லாத நிறுவனங்களுக்கு இந்த வரி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஆலைக்கான கட்டுமான பணிகளை தொடங்கிய அல்லது பூமி பூஜை போட்ட நிறுவனங்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் மருந்து ஏற்றுமதி
அமெரிக்காவானது இந்திய மருந்து உற்பத்தியாளர்களுக்கு மிக முக்கிய சந்தையாக உள்ளது. குறிப்பாக மலிவு விலை மற்றும் பொது மருந்துகளுக்கான பிரிவில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, அரவிந்தோ பார்மா லிமிடெட், க்ளாண்ட் பார்மா லிமிடெட், லூபின் லிமிடெட் மற்றும் சிப்லா லிமிடெட் உள்ளிட்ட இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பெரும் இடியாக மாறியுள்ளது. உள்நாட்டு மருந்துத் துறை உலகளாவில் முன்னணியில் உள்ளது. உதாரணமாக உலகளாவிய தடுப்பூசி தேவையில் பாதிக்கும் மேலானதையும், அமெரிக்க பொது மருந்துகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தையும், இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் கால் பங்கையும் பூர்த்தி செய்கிறது. இந்திய மருந்து சந்தையின் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 31 சதவிகிதம் உயர்ந்து, 2025 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.2.65 லட்சம் கோடி) மதிப்பை எட்டியுள்ளது.
ரூ.77 ஆயிரம் கோடிக்கு ஆப்பு?
மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஆகஸ்ட் மாதத்தில் மருந்து ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 6.94 சதவிகிதம் உயர்ந்து, 2024ம் ஆண்டில் 2.35 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2025ம் ஆண்டில் 2.51 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த 2024 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட,மொத்த மருந்துப்பொருட்களின் மதிப்பு 27.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதிலிருந்து அமெரிக்காவிற்கு மட்டும் 31 சதவிகிதம் அதாவது 77 ஆயிரத்து 231 கோடி மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டின் முதல் பாதியில் இந்தியா இதுவரை 3.7 பில்லியன் அதாவது 32 ஆயிரத்து 505 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றமதி செய்துள்ளது. டாக்டர் ரெட்டீஸ், அரபிந்தோ பார்மா, சைடஸ் லைஃப் சயின்சஸ், சன் பார்மா மற்றும் க்ளாண்ட் பார்மா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 30–50 சதவிகித்தை அமெரிக்க சந்தையிலிருந்து பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தியில் சர்வதேச அளவில் மூன்றாவது இடம்
மத்திய அரசின் மற்றொரு தரவுகள், “மருந்து உற்பத்தியில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்திலும், உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் மதிப்பில் 14வது இடத்திலும் உள்ளது. ஏற்கனவே தடுப்பூசிகள் மற்றும் ஜெனரிக்ஸின் முக்கிய சப்ளையராக இருக்கும் இந்தத் துறை, 2030 ஆம் ஆண்டுக்குள் 130 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விரிவடைந்து 2047 ஆம் ஆண்டுக்குள் 450 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகுப்பாய்வு நிறுவனமான IQVIA-வின் அறிக்கை, இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு கணிசமான அளவு மருந்துகளை வழங்குவதாகவும், அனைத்து மருந்துச் சீட்டுகளில் பத்தில் நான்கு இந்திய நிறுவனங்களால் வழங்கப்படுவதாகவும்” விளக்குகிறது.
இந்தியா மேல என்னப்பா வன்மம்?
இந்நிலையில், ட்ரம்பின் 100 சதவிகித வரி விதிப்பு, அமெரிக்க சந்தையில் இந்திய பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலையை இரட்டிப்பாக்கும் (விலக்குகள் இல்லை என்று வைத்துக் கொண்டால்), அவை விலை-போட்டித்தன்மையைக் குறைக்கும். இது வருவாயைக் குறைக்கலாம், லாபத்தைக் குறைக்கலாம் மற்றும் சில நிறுவனங்கள் சில தயாரிப்பு வரிசைகளிலிருந்து பின்வாங்க வழிவகுக்கும்.
இறக்குமதி செய்யப்படும் மருந்து இறக்குமதிகள் மீதான வரிகள் 250% வரை எட்டக்கூடும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆரம்பத்தில் ஒரு சிறிய வரியை விதிப்பதன் மூலம் தொடங்கி, பின்னர் படிப்படியாக அதை 150 சதவிகிதமாகவும் பின்னர் 250 சதவிகிமாகவும் உயர்த்துவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த அச்சுறுத்தல்களால் நிஃப்டி பார்மா குறியீடு மற்றும் சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ், சிப்லா மற்றும் அரவிந்தோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி விதிக்கப்பட்டுள்ள 100 சதவிகித வரியானது, அமெரிக்காவிற்கான இந்திய மருந்து ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.





















