Top 10 News: முகாம்களாக மாறும் பள்ளிகள், எடப்பாடியை சாடிய சேகர் பாபு - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
இன்று ரெட் அலெர்ட்:
ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. இருப்பினும், தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 21 செ.மீ. மேல் மழை பெய்யும் என்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை கொட்டிய வடமாவட்டங்களில், பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாததால் பொதுமக்கள் அவதி.
பள்ளிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்த புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை தங்கும் முகாமாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. புயல், மழையால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைக்க, மூடப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களை உடனடியாக திறக்க கோரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
திண்டிவனத்தில் மீட்பு பணிகள் தீவிரம்:
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையில் திண்டிவனம் கிடங்கல் ஏரி நிரம்பியதில், சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமம். மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை. தமிழ்நாடு மாநில மீட்பு படையில் இருந்து திண்டிவனம் மற்றும் விழுப்புரத்திற்கு கூடுதல் குழுவினர் விரைவு திண்டிவனத்திற்கு 4 குழுக்களும், விழுப்புரத்திற்கு 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடியை சாடிய அமைச்சர் சேகர்பாபு
மழைக்கால பணிகளை அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து இருந்தார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக சென்னையில் பலத்த மழை பெய்தபோது, எடப்பாடி பழனிசாமியின் கார் டயர் கூட எந்த தெருவுக்கும் செல்லவில்லை” என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அவர்களின் எழுச்சி நாளில் அன்பான வாழ்த்துகள். தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய, எல்லை பாதுகாப்பு படை ஒரு முக்கியமான தற்காப்பு வரிசையாக உள்ளது. அவர்களின் விழிப்புணர்வும் தைரியமும் நமது தேசத்தின் பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றன” என தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் 5ம் தேதி பதவியேற்பு
மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் வரும் 5ம் தேதி பதவியேற்பார் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், புதிய முதலமைச்சர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஷிண்டே தரப்பு உள்துறை அமைச்சர் பதவியை கேட்பதால், கூட்டணியில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
டாலருக்கு மாற்றாக வேறொரு நாணயத்தை முன்னெடுக்க முயற்சிக்கும், பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அந்த நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்படும் எனவும், அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேற வேண்டுன் என்றும் ட்ரம்ப் பேசியுள்ளார்.
ஹைப்ரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை ஹைப்ரிட் மாடலில் நடத்த நிபந்தனைகளுடன், பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 2031ம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற உள்ள, 3 ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்கும் ஆட்டங்களை வெளிநாட்டில் மட்டுமே நடத்த வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் மாற்றம்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி, 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அந்த அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் விளைவாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.