Top 10 News: ராக்கெட் வேகத்தில் சரிந்த தங்கம் விலை, தமிழக மீனவர்கள் போராட்டம் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
சென்னையில் நள்ளிரவு முதல் தொடரும் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தேங்கியுள்ள மழைநீர் மோட்டார்கள் மூலம் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இதனிடையே, சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 12 பேர் கைது
வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்ட நாகையை சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, விசைப்படகுகளையும் சிறைபிடித்துள்ளது. நேற்று கன்னியாகுமரியை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து பாம்பனில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.
முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு
முதுநிலை ஆசிரியர் உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்குரிய புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த தேர்வு நடைபெறும் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக முதுநிலை ஆசிரியர் தேர்வு 2021-ல் நடத்தப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 80 குறைந்து 56 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை 10 பைசா குறைந்து 101 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகிறது.
மணிப்பூரில் பதற்றம்
மணிப்பூரின் ஜாகுர்தோர் பகுதியில், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில், குக்கி ஆயுதக் குழுவை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. போரோ பெக்ராவில் உள்ள காவல் நிலையத்தை நோக்கி குக்கி ஆயுதக் குழுவினர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், CRPF படையினரின் பதில் தாக்குதலின் 10 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்புப் படையை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.
மதத்தின் பெயரில் வாட்ஸாப் குழு - ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்ட்
மலையாள இந்து அதிகாரிகள்' என்ற பெயரில் வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி, பல சமுதாயங்களைச் சேர்ந்த சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இணைத்ததோடு, மதம் சார்ந்த கருத்துக்களை பதிவிட்ட புகாரில், கே.கோபாலகிருஷ்ணன், என்.பிரசாந்த் ஆகிய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவில் பாலியல் அமைச்சகம்?
ரஷ்யாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கண்காணிக்க புதியதாக பாலியல் அமைச்சகத்தை நிறுவ, அந்நாட்டு அதிபர் புதின் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், அதனை ஊக்குவிக்க இந்த திட்டத்தை ரஷ்யா கையிலெடுத்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்:
பேஜர் தாக்குதலை நடத்தியதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக 165 ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த ஏவுகணைகள் வடக்கு இஸ்ரேலின் ஹைபாவைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பான் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் இன்று தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இளம் வீரர் லக்ஷயா சென் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். பி.வி.சிந்து முதல் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானையும், ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடனும் மோதுகின்றனர்.
தீபக் சாஹர் நம்பிக்கை
”2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே நிர்வாகம், என்னை ஏலத்தில் எடுக்கும் என நம்புகிறேன். கடந்த முறை விடுவித்தபோதும், பல முயற்சிகளை மேற்கொண்டு என்னை அணியில் கொண்டு வந்தனர். இந்த வருடம் என்ன நடக்கபோகிறது என்பது தெரியவில்லை” என தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.