வெள்ளத்தில் நடந்த வேட்டை.. துண்டு துண்டாய் வெட்டப்பட்டு முதலைக்கறி விற்பனை.. தெலங்கானாவில் நடந்தது என்ன?
தெலங்கானாவில் முதலையை வேட்டையாடி அதன் மாமிசத்தை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இமாச்சல பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் என வட இந்தியாவில் வெளுத்து வாங்கிய மழையால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்த நிலையில், தெலங்கானாவிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது.
வரலாறு காணாத மழை, வெள்ளம்:
வரலாறு காணாத அளவிற்கு பெய்த இந்த மழையால் அந்த மாநிலத்தில் பெரியளவு சேதாரம் ஏற்பட்டது. தெலங்கானாவில் பெய்த மழை காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள ஆறுகள், நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடிய நீர்நிலைகளால், ஆழமான ஆற்றுப்பகுதிகளில், நீர்நிலைகளில் வசித்து வந்த உயிரினங்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
தெலங்கானாவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மாவட்டங்களில் வானாபர்தி, கட்வால், நாராயணபேட்டை மற்றும் முழுகு மாவட்டங்களும் அடங்கும். இந்த மாவட்டங்களில் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த ஆற்றுப்பகுதிகளில் வாழ்ந்து வந்த முதலைகள் ஊர்களுக்குள் புகுந்தது.
முதலை மாமிசம்:
அவ்வாறு ஊருக்குள் புகுந்த முதலைகளை கண்டு பலரும் பயந்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சிலர் அந்த முதலைகளை சட்டவிரோதமாக வேட்டையாடியுள்ளனர். சில நபர்கள் முதலைகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறையினருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, முழுகு மாவட்டத்தில் உள்ள வஜேடா மண்ட,ல் பகுதியில் அமைந்துள்ளது சந்தரபட்லா கிராமம். இந்த கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக முதலைகள் மாமிசத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிரடியாக கிராமத்திற்குள் புகுந்த அதிகாரிகள் முதலைகள் மாமிசத்தை விற்பனை செய்த கும்பலை சுற்றி வளைத்தனர். ஆனால், ஒருவரை மட்டுமே அவர்களால் கைது செய்ய முடிந்தது. மற்றவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.
விற்பனை:
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து முதலைகள் மாமிசத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். தெலங்கானாவில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, கோதாவரி ஆற்றின் வந்த வெள்ளத்தின் போது குடியிருப்பின் உள்ளே புகுந்த முதலைகள்தான் இவைகள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெள்ளத்தினால் ஊருக்குள் புகுந்த முதலைகளை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை சிலர் விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெள்ளத்தின்போது குடியிருப்புகளுக்குள் புகுந்த பாம்பு, முதலைகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணியை வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: Haryana Violence: "ஹரியானா வன்முறைக்கு காரணம் இதுதான்.." துணை முதலமைச்சர் துஷ்யந்த் பரபரப்பு பேட்டி..!
மேலும் படிக்க: Haryana Clashes: 3-வது நாளாக பற்றி எரியும் ஹரியானா...அண்டை மாநிலங்களுக்கு பரவும் பதற்றம்...உச்சகட்ட அலர்ட்டில் டெல்லி!