Father Wax Statue: இறந்த தந்தையை திருமண பரிசாக அளித்த அண்ணன்.. நெகிழ்ந்து கண்ணீர் சிந்திய தங்கை..
பொதுவாக குடும்ப உறவுகளில் தந்தைக்கும், மகளுக்குமான பாசம் அளப்பறியது. தந்தை தான் தன்னுடைய முதல் ஹீரோ என அனைத்து மகள்களும் சொல்லும் அளவுக்கு அவர்களின் அன்பு நிறைந்திருக்கும்.
தெலங்கானாவில் தங்கையின் திருமணத்திற்கு அண்ணன் அளித்த பரிசு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக குடும்ப உறவுகளில் தந்தைக்கும், மகளுக்குமான பாசம் அளப்பறியது. தந்தை தான் தன்னுடைய முதல் ஹீரோ என அனைத்து மகள்களும் சொல்லும் அளவுக்கு அவர்களின் அன்பு நிறைந்திருக்கும். இதுபோன்ற வார்த்தைகள் அவ்வப்போது நிகழும் தருணங்களில் உண்மையாகி காண்பவர்களையே கண் கலங்க வைக்கும். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர்களின் மறைவுக்குப் பிறகு எந்தவொரு கடினமான தருணங்களிலும் தந்தையை நினைத்துப் பார்க்காத மகள்களே இருக்க முடியாது என்று சொல்லலாம்.
அந்த வகையில் தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஹைதரபாத் நகரில் சுப்பிரமணியன் -ஜெயா தம்பதி இவர்களுக்கு ஹனிக்குமார் என்ற மகனும் சாய் என்ற மகளும் உள்ளனர். இதில் சுப்பிரமணியன் கடந்தாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் மரணம் அந்த குடும்பத்தினரை நிலை குலைய செய்தது. சுப்பிரமணியன் நினைவுகளோடு நாட்களை கடந்த வந்த நிலையில் மகள் சாய்க்கு மதன் என்பவரோடு திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்தது.
திருமண நாள் நெருங்கி கொண்டிருக்க, அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தனது தந்தை இல்லையே என மகள் சாய் வேதனையோடு இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஹைதராபாத்தில் சாய்-மதன் வெகுவிமரிசையாக திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்நேரத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக தனது தந்தை சுப்பிரமணியன் மெழுகு சிலையை திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு மகன் ஹனிகுமார் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதைப்பார்த்த மணப்பெண் சாய் இன்ப அதிர்ச்சியில் தந்தை சிலைக்கு முத்தமிட்டு கண்ணீர் விட்டு அழுதார். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் சுப்பிரமணியன் சிலையோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தங்கையின் திருமணத்திற்கு அண்ணனின் அளித்த அன்பு பரிசு உறவினர்கள் மட்டுமின்றி அப்பகுதியைச் சேர்ந்த மக்களையும் நெகிழ்ச்சியடைய செய்தது. சமீபகாலமாக அனைத்து மாநில மக்களிடமும் தங்களது குடும்பத்தில் மறைந்த உறவினர்களை சிலையாக செய்து சுப நிகழ்ச்சிகளில் அவர்களும் இருக்குமாறு செய்து மகிழும் வழக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்