Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் இன்று 1891 பேருக்கு கொரோனா பாதிப்பு - 21 மாவட்டங்களில் பலி இல்லை
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் முதல் குறைந்து வருகிறது. 2-வது அலையின் வேகம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. அந்த மாதம் முழுவதுமே தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வந்தது. இதனைத் தொடர்ந்து போடப்பட்ட ஊரடங்கால் நோயின் தாக்கம் குறைந்தது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி தினசரி பாதிப்பு 26 ஆயிரத்து 513 ஆக இருந்தது. இதன் பிறகு ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு குறைந்துகொண்டே சென்றது. அந்த வகையில் ஜூன் 7-ந்தேதி அன்று 20 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி பாதிப்பு சென்றிருந்தது.
அதற்கு அடுத்த வாரத்தில் (ஜூன் 13) தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இப்படி குறைந்து கொண்டே சென்ற நோய் தொற்று ஜூன் இறுதியில் 4 ஆயிரத்து 500 ஆக இருந்தது.
இப்படி குறைந்து கொண்டே சென்ற நோய் தொற்று பெரிய அளவில் உயரவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் தடுப்பூசி போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களாக சென்னையில் தினசரி பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 17-ந்தேதியன்று 137 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இது, அதற்கு அடுத்த நாள் 150 ஆக அதிகரித்து இருந்தது. நேற்று முன் தினம் இந்த எண்ணிக்கை சிறிதளவே குறைந்துள்ளது. நேற்றும் 147 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இன்று 1891 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 891 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,41,248 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,891 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 41 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 623 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 138 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 138 ஆக உள்ளது.
கோவை 183, ஈரோடு 141, தஞ்சை 90, சேலம் 119, திருப்பூர் 97, செங்கல்பட்டு 102, கடலூர் 79, திருச்சி 71, திருவண்ணாமலை 65, திருவள்ளூர் 69, நாமக்கல் 59, கள்ளக்குறிச்சி 44, காஞ்சிபுரம் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 27 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,809 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 17 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 3 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 2 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8304 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக சேலத்தில் 4 பேரும், ஈரோரு, திருச்சியில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 21 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 26,158 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,423 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,81,201 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
12 வயதிற்குட்பட்ட 110 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39,695 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25,786 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7581 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
கேரளாவில் ஸிகா வைரஸ் பாதிப்பு 41 ஆக உயர்வு
கேரள மாநிலத்தில் ஸிகா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
கேரளாவில் சனி, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சனி, ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் - கேரள அரசு
எதிர்கால அலைகள் குழந்தைகளை பாதிக்குமா அல்லது தொற்றின் தீவிரம் அதிகரிக்குமா என்பது அனைத்தும் ஊகங்களே
எதிர்கால அலைகள் குழந்தைகளை பாதிக்குமா அல்லது தொற்றின் தீவிரம் அதிகரிக்குமா என்பது அனைத்தும் ஊகங்களே. பெரும்பாலான பெரியவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாலும், தற்போதைய நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி அனுமதிக்கப்படவில்லை என்பதாலும், வருங்கால அலைகள் குழந்தைகளை பாதிக்கும் என்று மக்கள் ஊகத்தின் அடிப்படையில் தெரிவித்து வருகின்றனர் என புதுடெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் குழந்தை மருத்துவப் பிரிவு இயக்குநர் டாக்டர் பிரவீன் குமார் தெரிவித்தார்.
முன்பதிவு இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் - மதுரை மாநகாராட்சி
18 வயதுக்கு மேற்பட்ட முன்னுரிமைப் பிரிவினர் கோவிட் தடுப்பூசிக்கு http://maduraicorporation.co.in என்ற இணையதளம் மூலம் வரும் ஜூலை 23 வெள்ளிக்கிழமை மாலை முதல் முன்பதிவு செய்யலாம். இணைய வசதி இல்லாதவர்கள் தடுப்பூசி மையத்தில் நேரடி முன்பதிவு செய்து கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்டோர், 1 வயது வரையிலான குழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள், அவர்தம் காப்பாளர்கள் ஆகியோருக்கு எவ்வித முன்பதிவும் தேவையில்லை. முன்பதிவு செய்தவர்களுக்கு வருகையைப் பொருத்து தடுப்பூசி மையம் மற்றும் நாள் விவரங்கள் Slot உறுதி செய்யப்பட்டவுடன், முந்தைய நாள் இரவில் SMS மூலம் அனுப்பப்படும். அதன்படி குறிப்பிட்ட மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.