"மனசாட்சிய உலுக்கி இருக்கனும்" இஸ்லாமிய சிறுவன் அறையப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
உத்தரப் பிரதேசத்தில் சக மாணவர்களை விட்டு, இஸ்லாமிய சிறுவனை ஆசிரியை அறையச் சொன்ன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராகவும், தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் நடத்தப்படும் தாக்குதல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நற்பண்புகளை கற்றுத்தர வேண்டிய பள்ளி, கல்லூரிகளில் விளிம்பு நிலை மாணவர்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் சமூகம் எந்தளவுக்கு பின்தங்கியுள்ளது என்பதை காட்டுகிறது.
இஸ்லாமிய சிறுவனை ஆசிரியை அறையச் சொன்ன சம்பவம்:
சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் சக மாணவர்களை விட்டு, இஸ்லாமிய சிறுவனை ஆசிரியை அறையச் சொன்ன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முசாபர்நகரில் உள்ள தனியார் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், இஸ்லாமிய மாணவனை அறையும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர் உத்தரவிடுவது பதிவாகியிருந்தது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தனது செயலை நினைத்து தான் வெட்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியை விளக்கம் அளித்த போதிலும், பின்னர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
இச்சூழலில், கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இருந்து அறிக்கை கேட்டு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்:
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. குழந்தையின் குடும்பத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதில் கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில், "இது வாழ்வதற்கான உரிமை பற்றிய விஷயம். இந்த தீவிரமான விஷயத்தை நினைத்து கவலை கொள்கிறோம். குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது மாநிலத்தின் மனசாட்சியை உலுக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.
"சிறுவனின் கல்விக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்"
மேலும், இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசகர்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கி, அதை அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் கல்விக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து ஆட்சேபனை தெரிவித்த நீதிமன்றம், "முதல் தகவல் அறிக்கையில் குழந்தையின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் இடம் பெறவில்லை. மதத்தின் காரணமாக சிறுவன் தாக்கப்பட்டதாக தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், அது எஃப்ஐஆரில் குறிப்பிடப்படவில்லை" என குறிப்பிட்டுள்ளது.