MediaOne: 'தேசப் பாதுகாப்பு என்று உரிமைகளை மறுப்பதா?'- மீடியா ஒன் சேனல் மீதான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி
தேசப் பாதுகாப்பு என்று கூறி, குடிமக்களின் உரிமைகளை மறுப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், மீடியா ஒன் சேனலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசப் பாதுகாப்பு என்று கூறி, குடிமக்களின் உரிமைகளை மறுப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், மீடியா ஒன் சேனலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் செயல்பட்டு வந்த மீடியா ஒன் என்னும் செய்தி சேனலை மத்யமம் ஒலிபரப்பு நிறுவனம் நடத்தி வந்தது. இதற்கு வழங்கப்பட்டு வந்த அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் அனுமதியை ரத்து செய்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கடந்த 2022 ஜனவரி 31 அன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த அலைவரிசையின் பெயரை அனுமதிக்கப்பட்ட அலைவரிசைகளின் பட்டியலில் இருந்தும் இந்த உத்தரவு நீக்கியது. தேசத்தின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்தது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து, சேனலின் ஆசிரியர் பிரமோத் ராமன் உள்ளிட்ட பல மனுதாரர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம் நாகரேஷ் ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், உள்துறை அமைச்சகத்தால் இந்த அலைவரிசைக்குப் பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது நியாயமானது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிரமோத் ராஜன் மற்றும் கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சீல் வைக்கப்பட்ட உறையில் உள்துறை அமைச்சகம் அளித்த தகவல்கள் அடிப்படையில், மீடியா ஒன் சேனலுக்குப் பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதை உயர் நீதிமன்றம் நியாயப்படுத்தியதை, உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
தேசப் பாதுகாப்பு என்று கூறி, குடிமக்களின் உரிமைகளை மறுப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், மீடியா ஒன் சேனலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய நீதிபதிகள் அமர்வு, ''தேசிய பாதுகாப்பு நலனுக்காக என்ற வார்த்தையைக் கூறி, மத்திய அரசு இந்தத் தடையை முன்னெடுத்துள்ளது. ஆனால் அதற்கான காரணத்தைத் தெளிவாகக் கூறவில்லை.
ஊடகம் சுதந்திரமாக இயங்க வேண்டியது ஜனநாயக நாட்டுக்கு அவசியமான ஒன்றாகும். உண்மையைப் பேச வேண்டிய கடமை ஊடகத்துக்கு இருக்கிறது. கசப்பான உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்கிறது.
சட்டத்தின்கீழ் மக்களுக்கான தீர்வுகளை மறுக்க நாட்டின் பாதுகாப்பைப் பயன்படுத்துவது சரியானதல்ல. இது சட்ட விதிகளுக்குப் புறம்பானது'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.