BBC Ban Case: பி.பி.சி.க்கு எதிரான வழக்கு; 'நேரத்தை வீணடிக்க வேண்டாம்' மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
இந்தியாவில் பிபிசிக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் கலவரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசிக்கு தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பு சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கருத்து:
அப்போது, ”இந்த மனு முற்றிலும் தவறான கருத்தை கொண்டுள்ளது, இதை எப்படி வாதிடுவது? நாங்கள் முழுமையான தணிக்கையை வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், என்ன இது?" என்று மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் தரப்பு கோரிக்கை
ஆனால், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். ”இண்டியாஸ் டாட்டர் ஆவணப்படத்திற்கும் இதே தான் நடந்தது. இன்னும் நமக்கு மும்பை கலவரம் மற்றும் காஷ்மீர் விவகரங்களும் உள்ளன. எனவே, குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசிக்கு எதிரான இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
மனு தள்ளுபடி:
ஆனால், உறுதியாக மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ”இனியும் நேரத்தை வீணடிக்க வேண்டாம், தாக்கல் செய்யப்பட்ட மனு முற்றிலும் தவறானது. அதில் எந்த தகுதியும் இல்லை. எனவே, அந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என உத்தரவிட்டனர்.
குஜராத் கலவரம்:
கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசி ஆவணப்படத்திற்கு அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்தது. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் வெளியான பிபிசி ஆவணப்படத்திற்கான லிங் அதிரடியாக நீக்கப்பட்டது.
பிபிசி ஆவணப்படம்
ஆனால், தடையை மீறி கேரளாவிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர். அதேபோல, தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிபிசி ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.
வழக்கு:
இந்நிலையில் தான், இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட தடை செய்ய வேண்டுமெனவும், இந்த ஆவணப்படத்திற்கு பின்னால் சதி உள்ளதா? என கண்டறிய என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்து சேனா என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.