BENGALURU : மசால் தோசை, மசால் தோசை தான்..! பெங்களூர் உணவகத்தை பாராட்டிய ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர்...
ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர் செவ் சீகல் பெங்களூரில் உள்ள வித்யார்தி பவனை பாராட்டியுள்ளார்.
ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர் செவ் சீகல் பெங்களூரில் உள்ள வித்யார்தி பவனில் உணவருந்திய பின், பாராட்டி தெரிவித்து 3 ஸ்டார் ரேட்டிங் கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகின் மிகப் பெரிய காபி செயின் வணிக நிறுவனமாக அறியப்படுகிறது ஸ்டார்பக்ஸ். அமெரிக்காவைத் தாண்டியும் கூட ஸ்டார்பக்ஸுக்கு தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளன. இளம் வயதினரையும் கவரும் வகையில் இவர்களும் பல புதிய காபி வகைகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவைத் தாண்டியும் கூட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்குக் கிளைகள் உள்ளன.
80 நாடுகளில் 33,833 கிளைகளுடன் உலகின் டாப் நிறுவனங்களில் ஒன்றாக இதுவும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை டாடா உடன் இணைந்து கடந்த 2012இல் மும்பையில் முதலில் ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் நாடு முழுக்க பல இடங்களில் இந்த கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் செவ் சீகல் அன்மையில் இந்தியா வந்துள்ளார். பெங்களூருவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் கலந்துக்கொள்ள வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் நேற்று பெங்களூரு நகரில் உள்ள வித்யார்தி பவனில் மசாலா தோசையும், ஃபில்டர் காபியும் ருசித்துள்ளார்.
அதோடு அதற்கு தனது மதிப்பீட்டையும் வழங்கி உள்ளார் அவர். இதனை அந்த உணவகம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.
நேற்று மாலை அவர் இந்த உணவகத்திற்கு வந்தபோது, அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பூ செண்டு கொடுத்து வரவேற்றனர். பின் அவருக்கு மசாலா தோசை மற்றும் ஃபில்டர் காபி பரிமாறப்பட்டுள்ளது.
View this post on Instagram
அதனை சாப்பிட்ட பின் செவ் சீகல் “நண்பரே, உங்களது ஃபேமஸான உணவு, காபி மற்றும் அன்பான உபசரிப்பை பெற்றதை கவுரவமாக கருதுகிறேன். அற்புதமான இந்த அனுபவத்தை என்னோடு சியாட்டலுக்கு கொண்டு செல்ல உள்ளேன். நன்றி” என அங்கிருக்கும் நினைவு பலகையில் எழுது கையெழுத்திட்டார்.
இந்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அந்த உணவகத்தின் பதிவை கண்டு நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.