செகந்திராபாத் தீ விபத்து… பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 லட்சம் வரை உதவித்தொகை அறிவித்த பிரதமர்..
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
செகந்திராபாத் நகரில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதியில் நேற்றிரவு பிடித்த திடீர் தீயில் அருகில் இருந்த 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதி எரிந்தது. இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
செகந்திராபாத் தீ விபத்து
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அதில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர். ஆனால், ஷோரூம் செயல்பட்டு வந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள ரூபி லாட்ஜில் பலர் தங்கி இருந்த நிலையில் அதில் இருந்தவர்கள் தீயில் சிக்கி கொண்டனர். அதில் சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜன்னல் வழியாக குதித்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், எட்டு தீயணைப்பு வாகனத்தின் மூலம் தீயை கட்டுப்படுத்தினர். சிலரை தீயணைப்பு வீரர்கள் ஹைட்ராலிக் ஏணி முலம் கிழே கொண்டு வந்தனர். இருப்பினும் ஏழு பேர் தீயில் சிக்கி உயிருடன் எரிந்தனர். மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தொடரும் மீட்புப்பணி
நடந்த இந்த கோர சம்பவத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஓட்டலில் சிக்கியிருந்த பலரை மீட்டனர். தொடர்ந்து அந்த விடுதியில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காயமடைந்தவர்கள் ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத் காவல் ஆணையர் சிவி ஆனந்த், மாநில அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கேட்டறிந்தனர்.
விபத்திற்கான காரணம்
இந்த விபத்திற்கான காரணம் எலக்ட்ரிக் பைக் வாகனத்தில் இருந்த பேட்டரியின் மூலம் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடும் புகை மூட்டம் காரணமாக அந்த விடுதியின் முதல் 2 தளங்களில் தங்கியிருந்த 8 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 8 பேரில் இருவர் சென்னையைச் சேர்ந்த சீதாராமன், பாலாஜி ஆவர். ஒரு பெண்ணும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். விடுதியில் இருந்து கீழே குதித்ததில் காயடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரதமர் மோடி நிதியுதவி
இந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், மீட்பு பணி நடைபெற்று வருவதாக ஐதராபாத் வடக்கு மண்டல கூடுதல் டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தெலுங்கானா மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி. ஸ்ரீனிவாஸ் யாதவ் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்