Pandora Papers | பண்டோரா பேப்பர்ஸ் என்றால் என்ன? சச்சின் டெண்டுல்கர் பெயர் அடிபடுவது ஏன்?
பண்டோரா பேப்பர்ஸ், செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக கூறப்பட்டு வருகிறது. அதிலும், இதில் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் ஒட்டுமொத்த இந்தியாவும் இதை கவனிக்கத் தொடங்கியுள்ளது.
பண்டோரா பேப்பர்ஸ் இன்று காலை முதல் செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக கூறப்பட்டு வருகிறது. அதிலும், இதில் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் ஒட்டுமொத்த இந்தியாவும் இதை கவனிக்கத் தொடங்கியுள்ளது.
அது என்ன பண்டோரா பேப்பர்ஸ்..
அட இது ஒண்ணுமில்லங்க, இது நம்ம பனாமா பேப்பர்ஸ் வகையறதான். பனாமா ஆவணங்கள் (Panama Papers) என்பது பனாமாவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேக்கா என்ற நிறுவனத்திலிருந்து கசிய வைக்கப்பட்ட 1.5 மில்லியன் இரகசிய ஆவணங்களைக் குறிக்கும். இது பெரும்புள்ளிகளின் சொத்து விவரங்களைப் புட்டுபுட்டு வைத்தது. அதேபோல் தான் பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) இப்போது பெரும்புள்ளிகளின் வெளிநாட்டு சட்டவிரோத முதலீடுகளை அம்பலப்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள பெரும் பணக்காரர்கள் எல்லாம் எந்தெந்த வெளிநாட்டில் எவ்வளவு முதலீடுகளை ரகசியமாக, சட்டவிரோதமாக செய்துள்ளனர் என்பதை இந்த பண்டோரா பேப்பர்ஸின் கதை.
இன்டர்னேஷன் கன்சோர்டியம் ஆஃப் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்ஸ் என்றொரு அமைப்பு இருக்கிறது. இதனை சுருக்கமாக (ICIJ) என்றழைக்கிறார்கள். இந்த அமைப்பு அவ்வப்போது புலனாய்வுகளை மேற்கொள்ளும். அந்த வகையில் 150க்கும் மேற்பட்ட புலனாய்வு பத்திரிகையாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் தகவல்கள் தான் பண்டோரா பேப்பர்ஸ் என்று வெளியிடப்பட்டுள்ளது.
அது ஏன் வெளிநாடுகளிலேயே பணத்தை பதுக்கிறார்கள் என்றொரு கேள்வியும் உங்களுக்கு எழலாம். அதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. பெரும் பணக்காரர்களும், டான்களும் எல்லா நாடுகளிலும் முதலீடு செய்துவிடுவதில்லை. பனாமா, சைப்ரஸ், துபாய் என குறிப்பிட்ட சில நாடுகளில் பணம் பதுங்குவது உண்டு. அதுவே வங்கி என்றால் ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் பதுக்குவது உண்டு.
பனாமா, சைப்ரஸ் எனப் பல நாடுகளிலும் ஷெல் கம்பெனிகளில் முதலீடு செய்து பணத்தைக் குவிப்பது பெரும் பணக்காரர்களுக்கு கைவந்த கலை. ஷெல் கம்பெனி இன்றால் பெயரளவில் மட்டுமே கம்பெனி. ஆஹோ ஓஹோ என்று ஒரு கம்பெனியை ஆரம்பிப்பார்கள் அப்புறம் அது திவாலானதாக மூடிவிடுவார்கள். அந்த கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு மூடப்படும் இடைவெளிக்குள் நிறைய பெரும் பண முதலைகள் லாபம் கண்டுவிடும்.
சர்ச்சையில் சச்சின்:
இந்நிலையில் இது வரை எந்த சர்ச்சையிலுமே சிக்காத சச்சின் டெண்டுல்கர் இந்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவர், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர், மாமனார் ஆனந்த் ஜெயந்திலால் மேத்தா ஆகியோரின் பெயரில் பிரிட்டனின் வெர்ஜின் தீவுகளில் ஷெல் கம்பெனியில் முதலீடு செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. சாஸ் இன்டர்னேஷனல் என்ற நிறுவனத்தின் மீது சச்சின் மற்றும் அவரது குடும்பத்தார் மேற்கொண்ட முதலீடு தான் இப்போதைய சர்ச்சைக்கு காரணம். ஆனால், சாஸ் நிறுவனத்தில் சச்சினின் முதலீடு சட்டப்பூர்வமானது. இது Liberalised Remittance Scheme திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வரி முறையாக கணக்கிடப்பட்டு வரி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சச்சின் தரப்பு கூறுகிறது.
இந்த ஆவணத்தில் ரஷ்ய அதிபர் புடின், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், பாப் பாடகி ஷகிரா, தொழிலதிபர் அனில் அம்பானி எனப் பலரது பெயரும் இடம்பெற்றுள்ளது. உலகின் அத்தனை கண்டங்களில் உள்ளவர்களும் பண்டோரா பேப்பர்ஸில் இடம்பெற்றிருக்கின்றனர்.