சபரிமலை ஐயப்பன் கோவில்: பங்குனி உத்திர திருவிழா! பக்தர்கள் கூட்டம், பாதுகாப்பு தீவிரம் - முழு விவரம் உள்ளே!
சபரிமலையில் நாளை (மார்ச் 23) காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக்கள் நடைபெறவுள்ளன.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீண்டும் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
கேரளாவின் மலைப்பகுதியில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில், உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களின் முக்கிய புனிதத் தலமாக கருதப்படுகிறது. இங்கு குடிகொண்டிருக்கும் தர்மசாஸ்தா ஐயப்பனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி, கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக உள்ளது.சபரிமலைக்கு பக்தர்கள் பொதுவாக பம்பா மற்றும் எரிமேலி வழியாக புனித பயணம் மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் இந்தப் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவுக்காக கோவில் நடை திறக்கப்பட்டு, அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலையை தரிசித்தனர். பின்னர் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் கோவில் நடை திறக்கப்படும் என்று தேவஸ்வம் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை (மார்ச் 23) காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக்கள் நடைபெறவுள்ளன.
பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விழா காலத்தில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும். மேலும், திருவிழாவின் நிறைவு நிகழ்வாக ஏப்ரல் 1ஆம் தேதி பம்பைக் கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த ஆராட்டு நிகழ்ச்சி பக்தர்களிடையே பெரும் பக்தி உணர்வுடன் நடைபெறும் முக்கிய நிகழ்வாகும்.
திருவிழா காலத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய தேவஸ்வம் வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளங்களை பயன்படுத்துமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்கும் அறைகள் முன்பதிவுக்கும் தனி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக sabarimala.org.in, www.onlinetdb.com ஆகிய இணைய தளங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இம்முறை பங்குனி உத்திர திருவிழாவிற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பம்பை மற்றும் எரிமேலி பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















