Red Diary: காங்கிரஸ் அரசுக்கு எமனாக வந்த 'ரெட் டைரி'..ராஜஸ்தான் அரசியலில் தொடரும் சஸ்பென்ஸ்..நடந்தது என்ன?
முதலமைச்சர் அசோக் கெலாட்டை அம்பலப்படுத்தும் பல அதிர்ச்சி தகவல்கள் ரெட் டைரியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் இன்னும் நான்கே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அரசியலில் புதிய பூகம்பம் வெடித்துள்ளது. ஏற்கனவே, உட்கட்சி பூசலால் ராஜஸ்தான் காங்கிரஸ் தவித்து வரும் நிலையில், இந்த பிரச்னை அக்கட்சிக்கு மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது. இதற்கிடையே, இதை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புயலை கிளப்பிய 'ரெட் டைரி':
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. மணிப்பூர் பழங்குடி பெண்கள் வீடியோ விவகாரம் குறித்து ராஜஸ்தான் சட்டப்பேரவையில் விவாதம் நடந்த வந்தது. அப்போது, ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களுடன் மணிப்பூர் விவகாரத்தை ஒப்பிட்டு பேசி, ஆளுங்கட்சிக்கு ஷாக் கொடுத்தார் அமைச்சர் ராஜேந்திர சிங் குட்டா.
"பெண்களின் பாதுகாப்பில் நாம் தவறிவிட்டோம் என்பது உண்மைதான். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மணிப்பூருக்குப் பதிலாக, ராஜஸ்தானில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் ஏன் அதிகரித்துள்ளன என்பதை நாம் விவாதிக்க வேண்டும்" என குட்டா தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இப்படிப்பட்ட சூழலில், நேற்று சட்டப்பேரவை கூட்டத்தின்போது, சிவப்பு வண்ணத்தில் டைரி ஒன்றை கொண்டு வந்த குட்டா, முதலமைச்சர் அசோக் கெலாட்டை அம்பலப்படுத்தும் பல அதிர்ச்சி தகவல்கள் அதில் இருப்பதாக முழுக்கங்களை எழுப்பினார். சட்டப்பேரவையில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அவையில் இருந்து பாதுகாவலர்களால் அவர் வெளியேற்றப்பட்டார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த குட்டா, தான் தாக்கப்பட்டதாகவும், சில காங்கிரஸ் தலைவர்கள் தனது கையில் இருந்த டைரியை பிடுங்கி சில பக்கங்களை கிழித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் அசோக் கெலாட்டை அம்பலப்படுத்தும் 'ரெட் டைரி':
உச்சக்கட்ட அரசியல் பரபரப்புக்கு காரணமான 'ரெட் டைரி'யில் என்னதான் இருக்கிறது என்பது குறித்து விளக்கிய குட்டா, "முதலமைச்சர் கெலாட் பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் அதில் உள்ளன. அந்த டைரி, முதலமைச்சரின் நெருங்கிய உதவியாளரும், ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான தர்மேந்திர ரத்தோருக்கு சொந்தமானது.
கடந்த 2020ஆம் ஆண்டு, சச்சின் பைலட் தலைமையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், போர்க்கொடி தூக்கிய சமயத்தில், காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றுவதற்காக கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், சுயேட்சைகள் மற்றும் பிறருக்கு வழங்கிய லஞ்சம் குறித்த விவரங்கள் இந்த டைரியில் உள்ளன.
மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற ஊடகவியலாளர் சுபாஷ் சந்திரா, கடுமையான போட்டி அளித்த போதிலும், காங்கிரஸ் தனது வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக அளித்த லஞ்ச விவரங்களும் டைரியில் உள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ரத்தோரின் வீட்டில் இந்த டைரி இருந்தது.
கெலாட்டின் வேண்டுகோளின் பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அந்த டைரியை நான் மீட்டேன். டைரியை எரிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்" என்றார்.
எம்எல்ஏ குட்டாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சருமான சாந்தி தரிவால், "குற்றச்சாட்டுகள் எதிலும் உண்மை இல்லை. எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க.வும் இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர்" என்றார்.