ரேபிடோ ஓட்டுநரின் அத்துமீறிய செயல்; இளம்பெண் கண்ணீருடன் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ
தங்கும் விடுதிக்கு திரும்புவதற்காக ரேபிடோவில் முன்பதிவு செய்திருந்தபோது, ஓட்டுநர் தன்னை தகாத முறையில் தொட முயன்றதாகக் கூறப்படுகிறது.

பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் ரேபிடோ ஓட்டுநர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்த அவர், தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை கண்ணீர் மல்க கூறினார்.
பெங்களூருவில் இளம்பெண் ஒருவர், கடந்த வியாழக்கிழமை மாலை ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நவம்பர் 6 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் தனது அனுபவத்தை விவரித்த பிறகு பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது.
பாதிக்கப்பட்ட பெண் தனது இன்ஸ்டா பதிவில், சர்ச் தெருவில் இருந்து தனது தங்கும் விடுதிக்கு திரும்புவதற்காக ரேபிடோ சவாரிக்கு முன்பதிவு செய்ததாக கூறினார். ‘பைக்கில் சென்றிக்கொண்டிருந்தபோது, ரேபிடோ ஓட்டுநர் தனது கால்களைப் பிடிக்க முயன்றார். பின்னர், கால்கள் மீது கைவைத்தபடியே பயணித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத நான் அதிர்ச்சி அடைந்து, பைக்கை நிறுத்தப்படிபடி கூறினேன். அதை பொருட்படுத்தாமல் நிறுத்தாமல் சென்றார். பின்னர், நான் இதை வீடியோவாக பதிவு செய்தேன். குதிக்க மிகவும் பயந்து, சவாரி முடியும் வரை கண்ணீரை அடக்கிக்கொண்டன். எந்தவொரு பெண்ணும் இதுபோன்ற ஒன்றைச் சந்திக்க வேண்டியதில்லை என்பதற்காக நான் இதைப் பகிர்ந்து கொள்கிறேன். இதுபோன்ற ஒன்றைச் சந்தித்தது இது முதல் முறை அல்ல என்றாலும், இந்த முறை தான் வெளிப்படையாகப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்று கூறினார்.
அந்த வழியாக வந்த ஒருவர் பெண்ணின் துயரத்தைக் கவனித்து, ஓட்டுநரை தட்டிக்கோட்டதாக கூறப்படுகிறது. ஓட்டுநர் அவர் முதலில் மன்னிப்பு கேட்டு, பின்னர் வேகமாகச் சென்றுவிட்டு அச்சுறுத்தும் வகையில் சைகை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த செயலை செய்த ரேபிடோ ஓட்டுநரை கைது செய்தனர். அந்த நபரின் பெயர் லோகேஷ் எனத் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பைக் டாக்ஸி டிரைவர் மீது குவியும் புகார்கள்:
பைக் டாக்ஸி டிரைவர்கள் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதிவேகமாக செல்வது, பைக்கில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவது என பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதுவும் பெங்களூருவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சில மாதங்களுக்கு பைக்கில் அதிவேக சென்றதை தட்டிக்கேட்ட காரணத்தால், பெண் ஒருவர் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரால் தாக்கப்பட்டார் என்பது குறிப்படத்தக்கது.





















