Rakesh Jhunjhunwala Titan Share | ஒரு மணிநேரத்தில் ரூ.913 கோடி சம்பாத்தியம்: கில்லிபோல் சொல்லி அடித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
இந்தியாவின் வாரன் பஃபெட், இந்தியப் பங்குச்சந்தையின் பிக் புல் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளார்.
இந்தியாவின் வாரன் பஃபெட், இந்தியப் பங்குச்சந்தையின் பிக் புல் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா(Rakesh Jhunjhunwala) மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளார்.
இந்த முறை ஒரே ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை முதலீட்டின் வாயிலாக ரூ.913 கோடி சம்பாதித்து ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்திய பங்குச்சந்தை முதலீட்டில் முக்கியத்துவம் பெற்றவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனர். இதுதவிர, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் பங்கு வகிப்பவர் தான் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இந்தியப் பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதியன்று இவர், தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் டாட்டா மோட்டார்ஸ் மற்றும் டைட்டனில் வைத்திருந்த பங்குகள் வாயிலாக ரூ.893.87 கோடி ஈட்டினார். டாடா பங்கு வாயிலாக ரூ728.90 கோடி, டைட்டன் பங்கு(Titan Share) வாயிலாக ரூ164.97 கோடி என மொத்தம் ரூ.893.87 கோடி ஈட்டினார்.
ஆனால் எல்லா சாதனையாளர்கள் தங்கள் சாதனையை தாங்களே முறியடிப்பது போல், கடந்த மாத சாதனையை அவரே முறியடித்துள்ளார். இந்த முறை ஒரே ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை முதலீட்டின் வாயிலாக ரூ.913 கோடி சம்பாதித்துள்ளார்.
இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடனேயே டாடா குழும பங்குகளில் விற்பனை ஏறுமுகத்தில் இருந்தது. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 10 ஆண்டுகளாகவே டாடா பங்குகளில் வர்த்தகம் செய்வதில் கைதேர்ந்தவர். தனது பெயரிலும் தனது மனைவியின் பெயரிலும் டாடா பங்குகளை வாங்கி வைத்துள்ளார். இன்று டாட பாங்குகளின் விலை 52 வாரம் இல்லாத அளவுக்கு ரூ.2361க்கு விற்பனையானது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 3,30,10,395 பங்குகள் வைத்திருக்கும் டைட்டன் கம்பெனியின் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 9.32 சதவீதம் அதிகரித்தது. இதே நிறுவனத்தில் ராகேஷின் மனைவி ரேகாவுக்கு 96,470,575 பங்குகள் உள்ளன. இவர்கள் இருவரின் பங்குகளின் மொத்த எண்ணிக்கை 4,26,50,970. அந்த வகையில், ரூ.913 கோடி என்ற அளவில் இந்த தம்பதியின் டைட்டன் பங்குகள் மதிப்பு கூடியிருக்கிறது.
இதில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு மீண்டும் அடித்தது லக்கி ப்ரைஸ். டாடாவின் டைட்டன் நிறுவன பங்குகளை வாங்கி வைத்திருந்த ஜுன்ஜுன்வாலா கல்லா கட்டினார். இதனால் அவர் ரூ.913 கோடி சம்பாதித்துள்ளார்.
முன்னதாக டைட்டன் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், இரண்டாவது அலையில் இருந்த மீண்டுள்ளது இந்தியா. இதனால் வாடிகையாளர்களை தற்போது மீட்டெடுத்திருக்கிறோம். நகைத் தொழில் 78% வளர்ச்சி கண்டுள்ளது. கைக்கடிகாரம் மற்றும் ஆடை தொழில் 73% வளர்ச்சி கண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.