குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.3 லட்சம் வென்ற ரயில்வே ஊழியர்: ஊதிய உயர்வை ரத்து செய்து நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகம்!
மிகவும் பிரபலமான கவுன் பனேகா குரோர்பதி என்ற quiz show கடந்த 2000 ஆம் ஆண்டு அதன் ஒளிப்பரப்பினைத் தொடங்கி தற்போது 21வது ஆண்டில் வெற்றிகரமாகப் பயணித்துவருகிறது.
நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கவுன் பனேகா குரோர்பதி சீசன் 13 கலந்துக்கொண்டு ரூ.3 லட்சம் வரை வெற்றி பெற்ற ரயில்வே ஊழியருக்கு நோட்டீஸ் அனுப்பிய ரயில்வே நிர்வாகம். முறையாக அனுமதி பெறவில்லை என ஊதிய உயர்வினையும் அதிகாரிகள் நிறுத்திவைத்துள்ளனர்.
கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் நிச்சயம் இருக்கும். இதனை நிறைவேற்றும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு quiz show தான் கவுன் பனேகா குரோர்பதி. பொது அறிவு சம்பந்தமான கேள்விகளுக்குச் சரியாக விடையளிக்கும் நபர்களுக்கு பரிசுத்தொகை வந்து குவியும். இப்படி மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரயில்வே துறையில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒரு சட்ட பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறார். அப்படி என்ன நடந்தது? ஏன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டைமைக்காக அவருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தெரியுமா?
கோட்டா பகுதியைச்சேர்ந்த ரயில்வே துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் தேஷ் பந்த் பாண்டே, குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக ஆகஸ்ட் 9- 13 தேதி வரை மும்மைபில் தங்கியிருந்தார். பணிக்கு விடுப்பு எடுத்துவிட்டு குரோர்பதி சீசன் 13 ல் கலந்துக்கொண்ட இவர், அமிதாப் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் நேர்த்தியாகப் பதிலளித்து வந்த நிலையில், 11 வது கேள்விகளுக்கு அவரால் சரியாக பதிலளிக்க முடியவில்லை.
இதனையடுத்து லைப் டைம் கார்டினைப் பயன்படுத்தி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் பரிசுத்தொகையை வென்றார். ஒருவேளை 11 வது கேள்விக்கு பதில் அளித்திருந்தால் அவர் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் பரிசுத்தொகையினை வென்றிருப்பார். இருந்தப்போதும் நான் பெற்ற பரிசுத்தொகைக்கான காசோலையையுடன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு புகைப்படம் எடுத்த அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தான், அவருக்கு பேரதிர்ச்சிக் கொடுக்கும் விதமாக ரயில்வே நிர்வாகத்திலிருந்து அனுப்பிய நோட்டீஸ் வந்துள்ளது.
பொதுவாக மத்திய அரசு ஊழியர் ஒருவர் டிவி நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் முறையாக தெரிவித்திருக்க வேண்டும், அதற்கான விடுப்பு கடிதத்தையும் அதிகாரிகளிடம் சமர்பித்திருக்க வேண்டும். ஆனால் தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ள பாண்டே, சாதாரண விடுப்பு எடுப்பது போல் அதற்கான அனுமதிக்கேட்டு கடிதம் வழங்கியது தான் பிரச்சனையாக அமைந்துவிட்டது. மேலும் இவரது விடுப்பு கடிதத்தினை அதிகாரிகள் பரீசிலனை செய்யவும் இல்லையாம். இந்நிலையில் தான் இவர் முறையாக எந்த தகவலும் கொடுக்காமல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டமையால் அவருக்கு ரயில்வே நிர்வாகத்தினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தன்னுடைய திறமையின் மூலம் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 3 லட்சம் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற சந்தோஷத்தில் இருந்த ரயில்வே ஊழியர் தற்போது சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார். இதோடு மட்டுமின்றி இன்னும் சில மாதங்களில் அவருக்கு ஊதிய ஊயர்வு வழங்கப்படுவதாக இருந்த நிலையில் ரயில்வே வாரிய அதிகாரிகள் அதனையும் நிறுத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்சனையை சமாளிக்க என்ன செய்வது என்று வழக்கறிஞர்களுடன் ரயில்வே ஊழியர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
மிகவும் பிரபலமான கவுன் பனேகா குரோர்பதி என்ற quiz show கடந்த 2000 ஆம் ஆண்டு அதன் ஒளிப்பரப்பினைத்தொடங்கி தற்போது 21வது ஆண்டில் வெற்றிகரமாக பயணித்துவருகிறது. தமிழிலும் இதேப்போன்ற ஒரு நிகழ்ச்சி கோடீஸ்வரன் என்ற பெயரில் ஒளிப்பரப்பானாலும் அந்த அளவிற்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் ஹிந்தியில் இந்நிகழ்ச்சி வெற்றிப்பெற்றமைக்குக் காரணம் அனைவருக்கும் பிடித்தமான பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது நேர்த்தியாக அமைந்திருக்கும். இந்நிலையில் இந்த கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் 13 வது சீஸனையும் அமிதாப் பச்சன் தான் தொகுத்து வழங்குகிறார். 13 வது சீசனில் கலந்துக்கொண்ட ஆக்ராவைச்சேர்ந்த பார்வைக்குறைபாடுள்ள ஹிமானி என்ற ஆசிரியர் அனைத்துக் கேள்விகளுக்கு நேர்த்தியாக பதிலளித்து ஒரு கோடி ரூபாய் வரை வென்று இந்த சீசனில் முதல் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.