Rahul Gandhi: எட்றா வண்டிய.. மும்பை டூ ஐரோப்பா..! வெளிநாடு செல்லும் ராகுல் காந்தி.. 5 நாட்கள் திட்டம் என்ன?
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் முதல் வாரத்தில் ஐரோப்பா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் முதல் வாரத்தில் ஐரோப்பா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 நாள் பயணம்:
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, அடுத்த மாத தொடக்கத்தில் ஐரோப்பா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம் 5 நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.
பெல்ஜியத்தில் ஐரோப்பிய கமிஷனை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவும், ஒஸ்லோவில் நடைபெறும் நிகழ்வில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றவும் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர் சங்க கூட்டத்திலும் பங்கேற்கும் ராகுல் காந்தி, செய்தியாளர் சந்திப்பையும் நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜி20 மாநாடு:
ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கி வரும் நிலையில், டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. அந்த நேரத்தில் தான் ராகுல்காந்தி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு சென்று ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் ராகுல் காந்தி மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
தொடர் சுற்றுப்பயணம்:
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். அண்மையில் கூட லக்னோ சென்ற ராகுல் காந்தி, தற்போது கர்நாடகா சென்றுள்ளர். இதை முடித்துக்கொண்டு அவர் மகாராஷ்டிரா செல்ல திட்டமிட்டுள்ளார்.
I.N.D.I.A கூட்டணி:
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ள I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள் பீகார் மற்றும் கர்நாடாகவில் நடைபெற்றது. அதைதொடர்ந்து நடைபெற உள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் கூட்டணியின் இலச்சினை மற்றும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அவர்களோடு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்பதை தொடர்ந்து, அடுத்த வார தொடக்கத்தில் ராகுல் காந்தி ஐரோப்பா புறப்படுகிறார்.