"ஒட்டுமொத்த குடும்பத்தோட நம்பிக்கையும் நொறுங்கிடுச்சு" வேலையில்லா திண்டாட்டம் பற்றி மனம் திறந்த ராகுல் காந்தி!
விரக்தியின் பிரமைக்குள் சிக்கிய மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி உடைந்து போகிறான் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து உத்தர பிரதேசத்தை அடைந்துள்ளது.
"வேலையில்லாத் திண்டாட்டம் என்பது நோய்"
அடுத்த மாதம், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் யாத்திரை நடந்து வருவது முக்கியத்துவம் பெறுகிறது. யாத்திரையில் நாட்டின் முக்கிய பிரச்னைகளை எழுப்பி வரும் ராகுல் காந்தி, வாரணாசியில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேசினார்.
இதுகுறித்து தனது எஸ்க் வலைதள பக்கத்தில் குறிப்பிட்ட அவர், "டபுள் எஞ்சின் அரசாங்கத்தால் இளைஞர்களுக்கு இரட்டை அடி. உத்தர பிரதேசத்தில் இன்று மூன்றில் ஒரு இளைஞன் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சத் தகுதியுள்ள பதவிகளுக்குக் கூட வரிசையில் நிற்கின்றனர்.
முன்பு எல்லாம், வேலை கிடைப்பது என்பது ஒவ்வொருவரின் கனவாக இருந்தது. இப்போது எல்லாம், ஆட்சேர்ப்பு நடந்தால் கேள்வித்தாள்கள் முன்பே கசிந்துவிடுகிறது. முடிவுகள் வெளியிடுவதில்லை. நீண்ட நேரம் காத்திருந்து முடிவுகள் வந்த பிறகும், பணி கிடைப்பதில்லை, நீதிமன்றம் சென்று வழக்கு தொடர வேண்டியிருக்கிறது.
"விரக்தியில் சிக்கிய மாணவர்கள்"
ராணுவத்தில் இருந்து ரயில்வே மற்றும் கல்வியில் இருந்து காவல்துறைக்கு ஆட்சேர்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இந்த விரக்தியின் பிரமைக்குள் சிக்கிய மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி உடைந்து போகிறான்.
डबल इंजन सरकार मतलब बेरोज़गारों पर डबल मार!
— Rahul Gandhi (@RahulGandhi) February 18, 2024
आज बेरोज़गारी की बीमारी से UP का हर तीसरा युवा ग्रसित है। जहां डेढ़ लाख से अधिक सरकारी पद खाली हैं, वहां न्यूनतम योग्यता वाले पदों के लिए भी ग्रेजुएट, पोस्ट ग्रेजुएट और PhD होल्डर्स लाइन लगा कर खड़े हैं।
पहले तो भर्ती निकलना एक सपना… pic.twitter.com/qqNLu6ttRM
இதையெல்லாம் கண்டு வேதனையடைந்த இளைஞர்கள், தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகிறான். அங்கு, காவல்துறையினரிடம் இருந்து தடியடிகளைப் பெறுகிறான். ஒரு மாணவனுக்கு, வேலை என்பது வெறும் வருமான ஆதாரமாக இல்லாமல், அவனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் கனவாகவும் இருக்கிறது.
இந்தக் கனவு உடைந்ததன் மூலம், ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் நொறுங்கிவிடுகிறது. காங்கிரஸின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம்" என பதிவிட்டுள்ளார்.