"இனி அவர பத்தி இப்படி பேசாதீங்க" ராகுல் காந்திக்கு டோஸ் விட்ட சுப்ரீம் கோர்ட்
ஆங்கிலேயர்களின் சேவகனாக சாவர்க்கர் இருந்ததாகவும் அவர்களிடம் இருந்து அவர் ஓய்வூதியம் பெற்றதாகவும் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சுதந்திர போராட்ட வீரரை இப்படி பேசலாமா? இந்திய வரலாற்றைப் பற்றி எதுவும் தெரியாதபோது இப்படிதான் பேசுவார்கள் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.

சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளது உச்ச நீதிமன்றம். ஆங்கிலேயர்களின் சேவகனாக சாவர்க்கர் இருந்ததாகவும் அவர்களிடம் இருந்து அவர் ஓய்வூதியம் பெற்றதாகவும் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சுதந்திர போராட்ட வீரரை இப்படி பேசலாமா? இந்திய வரலாற்றைப் பற்றி எதுவும் தெரியாதபோது இப்படிதான் பேசுவார்கள் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.
சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியது என்ன?
கடந்த 2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி சில கருத்துகளை தெரிவித்திருந்தார். சாவர்க்கர், ஆங்கிலேயர்களின் சேவகனாக இருந்ததாகவும் அவர்களிடம் இருந்தே ஓய்வூதியம் பெற்றதாகவும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே புகார் அளித்திருந்தார். சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் நோக்கில் இப்படி பேசியதாகவும், சாவர்க்கரை உள்நோக்கத்துடன் அவமதித்துள்ளதாகவும் ராகுல் காந்திக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, தனக்கு எதிராக அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்தார். சம்மனை ரத்து செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை அணுகினார் ராகுல் காந்தி.
ராகுல் காந்திக்கு டோஸ் விட்ட சுப்ரீம் கோர்ட்:
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை விதித்தது. இருப்பினும், ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை மேற்கொண்ட நீதிபதிகள், "அவர் (சாவர்க்கர்) ஒரு உயர்ந்த அந்தஸ்து கொண்ட மனிதர். அவர் அரசியல் கட்சியின் தலைவர். ஏன் இப்படி பிரச்சனையை தூண்ட வேண்டும்?
அவரை வணங்கி வழிபடும் மகாராஷ்டிராவில் உள்ள அகோலாவுக்குச் சென்று, இப்படி பேசுங்கள் பார்க்கலாம். இதைச் செய்யாதீர்கள். ஏன் இப்படி பேசுனீர்கள்?" என கேள்வி எழுப்பினர். பின்னர் பேசிய நீதிபதி தீபங்கர் தத்தா, "மகாத்மா காந்தி வைஸ்ராயிடம் எழுதிய கடிதங்களில் "உங்கள் உண்மையுள்ள சேவகன்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதால் அவரை ஆங்கிலேயர்களின் சேவகன் என்று அழைக்க முடியுமா?
வைஸ்ராயை குறிப்பிடும்போது மகாத்மா காந்தி "உங்கள் நம்பிக்கைக்குரிய சேவகன்" என்று பயன்படுத்தியது உங்கள் கட்சிக்காரருக்கு தெரியுமா? அவரது பாட்டி (இந்திரா காந்தி) பிரதமராக இருந்தபோது, சுதந்திரப் போராட்ட வீரரான சாவர்க்கரைப் புகழ்ந்து கடிதம் அனுப்பியது உங்கள் கட்சிக்காரருக்குத் தெரியுமா?
எனவே, அவர் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி பொறுப்பற்று பேச வேண்டாம். சட்ட நுணுக்கங்களை குறிப்பிட்டு நன்றாக வாதம் முன்வைத்தீர்கள். அது எங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நடத்தும் விதம் இதுவல்ல. இந்தியாவின் வரலாறு அல்லது புவியியல் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாதபோது, இப்படிதான் பேசுவார்கள்" என்றார்.





















