"ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம்" மோடிக்கு பறந்த கடிதம்.. ராகுல் காந்தி விடுத்த கோரிக்கை
பஹல்காம் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள இக்கட்டான சூழலில் இதுகுறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு முழுவதும் பஹல்காம் தாக்குதல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது, நமது கூட்டு உறுதிப்பாட்டின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக இருக்கும் என்றும் தனது கடிதத்தில் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
மோடிக்கு பறந்த கடிதம்:
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறி இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. இந்திய அரசுக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாகிஸ்தானும் பல நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பிரதமர் அவர்களே, ஒற்றுமையும் உறுதிப்பாடும் அவசியமான இந்த நேரத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்டுவது முக்கியம் என்று எதிர்க்கட்சிகள் நம்புகிறது.
"பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்போம்"
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, பஹல்காமில் அப்பாவி குடிமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள நமது கூட்டு உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக இருக்கும். இந்தக் கூட்டத்தொடர் அதற்கேற்ப கூட்டப்படும் என்பது எங்கள் அன்பான நம்பிக்கை" என குறிப்பிட்டுள்ளார்.
Congress President and Leader of the Opposition in the Rajya Sabha Shri Mallikarjun Kharge has written to the PM last night requesting that a special session of both Houses of Parliament be convened at the earliest to demonstrate a collective will to deal with the situation… pic.twitter.com/v3F5unn6I8
— Jairam Ramesh (@Jairam_Ramesh) April 29, 2025
ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், "பிரதமர் அவர்களே, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றாக நிற்போம் என்பதை இந்தியா காட்ட வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகிறது. அங்கு மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும் உறுதியையும் காட்ட முடியும். அத்தகைய சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.





















