தற்காலிகமாக நிறுத்தப்படும் மல்யுத்த வீரர்களின் போராட்டம்...கைது செய்யப்படுகிறாரா பாஜக எம்பி...நடந்தது என்ன?
பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்கு முடிக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அவர்களுடன் மத்திய அரசின் சார்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். 5 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராட்டத்தை ஜூன் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.
5 மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தை:
பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தற்போதை தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்கு முடிக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். ஆனால், பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து தெரியவில்லை.
இன்றைய பேச்சுவார்த்தையில், 5 முக்கிய கோரிக்கைகளை மல்யுத்த வீரர்கள் முன்வைத்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு சுதந்திரமான நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும், சம்மேளனத்திற்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள் கோரி கோரிக்கை வைத்தனர்.
மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஏற்பு:
இதை ஏற்று கொண்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், மல்யுத்த வீரர்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பஜ்ரங் புனியா, "சில விஷயங்கள் குறித்து விவாதித்தோம். ஜூன் 15 ஆம் தேதிக்குள் காவல்துறை விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் அதுவரை போராட்டங்களை நடத்த வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மேலும், பெண் மல்யுத்த வீரர்களின் பாதுகாப்பும் கவனிக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறினார். மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எஃப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம், அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். ஜூன் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்" என்றார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், "மல்யுத்த சம்மேளனத்தின் உள்மட்ட விசாரணை குழு ஒரு பெண் தலைமையில் அமைக்கப்படும். மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எஃப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும். 3 முறை தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீண்டும் தலைவராக கூடாது என்றும் மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் ஜூன் 15 ஆம் தேதி வரை எந்த போராட்டத்தையும் நடத்த மாட்டார்கள்.
மல்யுத்த வீரர்களுடன் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஜூன் 15ம் தேதிக்குள் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என மல்யுத்த வீரர்களுக்கு உறுதி அளித்துள்ளோம். WFI இன் தேர்தல் ஜூன் 30 ஆம் தேதிக்குள் நடத்தப்படும்" என்றார்.