Private corona vaccines: தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் அவலம்.. தரவுகள் என்ன சொல்கிறது?
தகுதியானவர்களில் 45% பேர் இன்னும் எந்தவித தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவில்லை.29% பேர் மட்டுமே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு முழு பாதுகாப்பை பெற்றுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள தனியார் மருத்துவமனைகளின் வசம் உள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளின் காலாவதி தேதி நெருங்குகிறது.
ஜூன் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசிக் கொள்கையின் கீழ், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்குகிறது. மீதமுள்ளவை (75:25 ஒதுக்கீடு) தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவை பணம் செலுத்தும் நபர்களுக்கு தடுப்பூசி போடப் பயன்படுகிறது. இருப்பினும், தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்து வருகிறது
சமீபத்திய தரவுகளின் படி, தனியார் மருத்துவமனைகளின் வசம் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதில், 15 முதல் 20% வரையிலான தடுப்பூசிகள் டிசம்பர் மாதத்துக்குள் காலாவதியாகும் என்று நம்பப்படுகிறது. எனவே, பயன்படுத்தப்படாமல் இருக்கும் தடுப்பூசிகள் காலாவதியாவதற்கு முன் அவற்றை இலவசமாக மக்களுக்கு செலுத்த தனியார் மருத்துவமனைகள் முடிவெடுத்துள்ளன.
2021, ஜனவரி மாத நடுப்பகுதியில், தடுப்பூசி கொள்முதல் திட்டமிட்டலை மறுபரிசீலனைக்கு உட்படுத்த இந்தியாவின் இரண்டாவது தனியார் மருத்துவக் குழுமமான மணிபால் மருத்துவமனை குழுமம் முடிவெடுத்துள்ளது. மும்பையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளும் இதேபோன்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
அதே சமயம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 21.64 கோடிக்கும் மேற்பட்ட (21,64,01,986) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
75:25 ஒதுக்கீடு:
மத்திய அரசின் 75:25 தடுப்பூசி ஒதுக்கீட்டிற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கண்டனத்தை தெரிவித்து வந்தனர். கொரோனா போன்ற ஒருநெருக்கடியான காலகட்டத்திலும் கூட தனியார் மருத்துவமனைகள் லாபத்தில் செயல்பட மத்திய அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்தனர். உதாரணமாக, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1,995 தடுப்பூசி மையங்களில், தனியார் மையங்களின் எண்ணிக்கை 148 ஆக உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 7% தனியார் தடுப்பூசி மையங்களுக்கு 25% தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், " தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த 25% ஒதுக்கீடு அவர்கள் தடுப்பூசி செலுத்திய உண்மையான அளவீடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாக உள்ளது. கிடைக்கக்கூடிய அளவுகளை ஆய்வு செய்து மற்றும் சரியான செயல் திறன் அடிப்படையிலான விநியோகத்தால் மட்டுமே குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான ஒதுக்கீட்டை 90:10 ஆக மாற்ற வேண்டும்." என்று கோரிக்கை வைத்திருந்தார்.
நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 116.87 கோடியைக் கடந்துள்ளது. இருந்தாலும், மக்கள்தொகையில் 45% பேர் இன்னும் எந்தவித தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவில்லை. தகுதியானவர்களில் 29 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு முழு பாதுகாப்பை பெற்றுள்ளனர்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 21.64 கோடிக்கும் மேற்பட்ட (21,64,01,986) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
மேற்கத்திய நாடுகளில் கொரோனா அலை தொடங்கியது:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியை மக்களுக்கு நிர்வகித்து வருகிறது.
ஆஸ்திரியாவில் இன்று முதல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது. எனவே, தடுப்பூசிகள் காலாவதியாவதற்கு முன் அவற்றை இலவசமாக மக்களுக்கு செலுத்துமாறு மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.