(Source: ECI/ABP News/ABP Majha)
காலநிலை மாற்ற பிரச்னைக்கு காரணமான உணவை ஒதுக்க வேண்டும்: குடியரசு தலைவர் முர்மு வேண்டுகோள்
இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலநிலை மாற்றம் உலக நாடுகளின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் வெள்ளம் ஏற்படுவதற்கும் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உலக உணவு இந்தியா நிகழ்ச்சியில் நிறை உரை ஆற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, காலநிலை மாற்ற பிரச்னைக்கு காரணமான உணவை ஒதுக்க வேண்டும் என்றும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத உணவை தேர்வு செய்ய வேண்டும்"
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நாம் என்ன உண்கிறோமோ அது, சுற்றுச்சூழலில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். முந்தைய தலைமுறையினர் இதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் நமது உணவு பழக்க வழக்கத்தை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
காலநிலை மாற்றத்தின் பிரச்னையை அதிகரிக்கும் உணவுகளை தவிர்த்து, நமது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, கிரகத்தின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் உணவுகளை நோக்கி நாம் உணர்வுபூர்வமாக முடிவுகளை எடுக்க வேண்டும்" என்றார்.
குடியரசு தலைவரை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸ், "இந்த துறையில் பெரிய வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் மொத்த விவசாய ஏற்றுமதியில் உணவு பதப்படுத்துதல் 75 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. மூன்று நாள் நிகழ்வின் போது சுமார் 35,000 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கையெழுத்தான 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
அனைத்து பங்குதாரர்களின் முயற்சியால் இந்த திட்டம் வெற்றியடைந்துள்ளது. உலக உணவு இந்தியாவின் முதல் நாளில், உணவு பதப்படுத்தும் அமைச்சகம் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு இடையே மொத்தம் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் மொத்த 17,990 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மொண்டலெஸ், கெல்லாக், ஐடிசி, இன்னோபெவ், நெட்ஸ்பைஸ், ஆனந்தா, ஜெனரல் மில்ஸ், அப் இன்பேவ் உள்ளிட்ட நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கடந்த ஒன்பது ஆண்டுகளில், உணவு பதப்படுத்தும் துறை சுமார் 50,000 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடுகளை (FDI) ஈர்த்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உணவு பதப்படுத்தும் துறையில் மானிய (பிஎல்ஐ) திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. உலக உணவு இந்தியா நிகழ்வு இந்தியாவை 'உலகின் உணவு கூடை' என்று காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார்.
உலக உணவு இந்தியா நிகழ்ச்சியின் முதல் பதிப்பு கடந்த 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆனால், கொரோனா தொற்றுநோய் காரணமாக தொடர்ச்சியான ஆண்டுகளில் இந்த சர்வதேச நிகழ்வை ஏற்பாடு செய்ய முடியவில்லை.
இந்த நிகழ்ச்சியின் போது, முதலீடு மற்றும் எளிதாக வணிகம் செய்வதை மையமாக வைத்து தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேசை கூட்டம் நடைபெற்றது.