PM Modi: நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
நான் எனது அம்மா இறக்கும் வரை என்னை சாதாரண ஒரு மனிதனாக தான் நினைத்தேன். ஆனால் அவர் இறந்த பிறகு என் வாழ்க்கையில் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் இணைத்து பார்க்கும் போது தான் புரிந்தது.
பூமியில் பணிகளை நிறைவேற்ற கடவுளால் அனுப்பப்பட்டவன் நான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை 5 கட்டம் நிறைவடைந்துள்ளன. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் நடந்து வரும் மக்களவை தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகவும், பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
மதவெறுப்பு, மாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் விதமாக பிரதமர் மோடி பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதமரின் கருத்துகள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதில் அவரிடம், “தொடர்ந்து சோர்வடையாமல் பணியாற்றுவது” குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
प्रधानमंत्री जी आप थकते क्यूँ नहीं हैं? pic.twitter.com/KV9QePeV8c
— Rubika Liyaquat (@RubikaLiyaquat) May 21, 2024
அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “நான் எனது அம்மா இறக்கும் வரை என்னை சாதாரண ஒரு மனிதனாக தான் நினைத்தேன். ஆனால் அவர் இறந்த பிறகு என் வாழ்க்கையில் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் இணைத்து பார்க்கும் போது நான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை என புரிந்தது. கடவுள் பூமியில் அவருடைய பணிகளை முடிக்க என்னை அனுப்பியுள்ளார். இந்த பதவி, புகழ் எல்லாம் அவர் கொடுத்தது தான். அதனால் தான் நான் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலை பெற்றுள்ளேன் என நம்புகிறேன். நான் சொல்வதற்கு பல்வேறு விமர்சனங்கள் வரலாம். ஆனால் நான் உணர்ந்தவற்றை சொல்கிறேன். நான் கடவுளின் கருவி மட்டும் தான். அவர் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறாரோ அதை என் மூலம் செய்கிறார். நான் கடவுளை இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. பிறரைப் போல நானும் கடவுள் நம்பிக்கை கொண்டு வழிபட்டு வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.