`ஆயுதப் படை சிறப்புச் சட்டம் விரைவில் நீக்கப்படும்!’ - அசாம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி!
வட கிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தை நீக்குவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தை நீக்குவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.
`பல ஆண்டுகளாக, வட கிழக்கு மாநிலங்கள் பெரும்பாலானவை ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றன. எனினும், கடந்த 8 ஆண்டுகளாக, அமைதியும், சட்ட ஒழுங்கிற்குக் கூடுதல் மதிப்பும் கொடுக்கப்பட்டு வருவதால் பல பகுதிகளில் ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தை நீக்கி வருகிறோம்’ எனக் கூறிய பிரதமர் மோடி அசாம் மாநிலத்தின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் `அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சி’ என்ற பெயரில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
முன்னதாக, பிரதமர் மோடி அசாமின் திஃபு பகுதியில் கால்நடை மருத்துவக் கல்லூரி, விவசாயத்திற்கான கல்லூரி ஆகியவற்றைத் திறந்து வைத்தார். மேலும் அவர் அசாம் மாநிலத்தில் உள்ள 2950 நீர்நிலைகளின் புத்துணர்வுக்காக அம்ரித் சரோவார் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன்பிறகு, அசாம் மாநிலத்தில் திப்ருகர் பகுதியில் 7 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் திறப்பிற்கான அடிக்கலை நாட்டியுள்ளார்.
பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் சுமார் 75 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். `இதன் காரணமாகவே, ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தை முதலில் திரிபுராவிலும், அதன்பிறகு மேகாலாயாவிலும் எங்களால் நீக்க முடிந்தது’ எனக் கூறியுள்ளார்.
`அசாம் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதப் படை சிறப்புச் சட்டம் அமலில் உள்ளது. அப்போதைய அரசுகள் தொடர்ந்து அதனை நீடித்து வந்துள்ளன. எனினும், தற்போது சூழல் வெகுவாக மேம்பட்டிருப்பதால் சுமார் 23 மாவட்டங்களில் சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது’ எனக் கூறிய பிரதமர் மோடி, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சிறப்புச் சட்டத்தை நீக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளார்.
ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தின் மூலமாக பிணையின்றி கைதுகள் மேற்கொள்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது முதலான சலுகைகள் ராணுவத்திற்கு வழங்கப்பட்டு வந்தன. இந்தச் சட்டத்தை நீக்குவது குறித்து ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாகாலாந்து மாநிலத்தின் மோன் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு தாக்குதல் 14 பேர் கொல்லப்பட்ட பிறகு, இந்தச் சிறப்புச் சட்டத்தை நீக்கக் கோரி கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, `பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு’ காரணமாக அசாம் மாநிலத்தில் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.