PM Modi AI Tool: அடுத்த லெவலுக்கு சென்ற பிரதமர் மோடி - காசி தமிழ் சங்கத்தில் AI டூல் மூலம் சிறப்பான சம்பவம்!
PM Modi AI Tool: வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்த உரையாற்றிய பிரதமர் மோடி, மொழி பெயர்ப்பிற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தியுள்ளார்.
PM Modi AI Tool: வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்த உரையாற்றிய பிரதமர் மோடி, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பாஷினி எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப டூலை பயன்படுத்தினார்.
காசி தமிழ் சங்கமம்:
காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை நமோகட்டில் பிரதமர் மோடி நேற்று மாலை தொடங்கி வைத்தார். அதோடு, கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையே இயக்கப்படும் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலையும் கொடியசைத்து தொடங்கினார். வரும் 31 வரை நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 1,400 பேர் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு, அங்கு வந்திருந்த விருந்தினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய பிரதமர் மோடி:
பிரதமர் மோடி தனது உரையை தொடங்கியதுமே, “தனது பேச்சின் நிகழ்நேர தமிழாக்கம் வேண்டுமானால், பார்வையாளர்களை இயர்போனைப் போட்டுக்கொள்ளுங்கள். இன்று புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு செயற்கை நுண்ணறிவு மூலம் இங்கு தொடங்குகிறது. இது ஒரு புதிய தொடக்கமாகும், மேலும் நான் உங்களை அணுகுவதை எளிதாக்குகிறது” என தெரிவித்தார்.
வழக்கமாக சர்வதேச தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு மற்றும் மாநாடு போன்ற நிகழ்வுகளில் தான், இதுபோன்ற நிகழ்நேர மொழிபெயர்ப்பு பயன்படுத்தப்படும். இந்தியாவில் இதுபோன்ற டூல்களின் பயன்பாடு மிகவும் குறைவு தான். இந்நிலையில் காசி தமிழ்ச் சங்கமத்தில் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
பாஷினி:
இதற்காக, இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 'பாஷினி' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிற இந்திய மொழிகளில் நடைபெறும் உரையை நிகழ்நேரத்தில், தங்கள் சொந்த மொழியில் கேட்க உதவும் AI-டூலாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக தொடர்ந்து பேசிவரும் பிரதமர் மோடி, அதன் பயன்பாட்டையும் அதிகரிக்கும் விதமாக இந்த பாஷினி டூலை பயன்படுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி உரை:
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் அனைவரும் விருந்தினர்களாக இருப்பதை விட எனது குடும்ப உறுப்பினர்களாக இங்கு வந்திருக்கிறீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து வாரணாசி செல்வது என்பது மகாதேவனின் (சிவன்) ஒருவரின் வீட்டிற்கு மற்றொரு வீட்டிற்கு செல்வதாகும். அதனால்தான் தமிழக மக்களுக்கும் வாரணாசிக்கும் இடையே உள்ள பந்தம் சிறப்பு வாய்ந்தது” என தெரிவித்தார்.
காசி தமிழ் சங்கமம் 2.0:
காசி தமிழ் சங்கமம் 2.0-ஓவில் கலை, இசை, கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் உடன், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலிருந்தும் தனித்துவமான தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காசி தமிழ் சங்கமம் இலக்கியம், பண்டைய நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை, நடனம், நாடகம், யோகா மற்றும் ஆயுர்வேதம் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவுரைகள் அடங்கும். கூடுதலாக, கருத்தரங்குகள் புத்தாக்கம், வர்த்தகம், அறிவுப் பரிமாற்றம், கல்வியியல் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் தொடர்பான விவாதங்களும் திட்டமிடப்பட்டுள்ளது.