Modi UAE Visit: அபுதாபியில் முதல் இந்து கோயில் - திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று பயணம்..!
Modi UAE Visit: ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறக்க, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று அபுதாபி புறப்படுகிறார்.
Modi UAE Visit: இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயில்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 900 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரங்களுடன், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் இறுதி வடிவம் பெற்றுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று அபுதாபி புறப்படுகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் ஏழாவது முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். கடந்த எட்டு மாதங்களில் இது மூன்றாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயண விவரம்:
- இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்கு செல்கிறார் பிரதமர் மோடி
- இன்று மாலை 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்தித்து உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்
- அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
- நாளை (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் துபாயில் 3-வது நாளாக நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
- அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும், பொதுவான பிராந்திய பிரச்னைகளை கையாள்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
- மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- கோயிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.
கத்தார் செல்லும் பிரதமர் மோடி:
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து பிரதமர் மோடி நேரடியாக கத்தார் தலைநகர் தோஹாவிற்கு செல்கிறார். 2016ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக அங்கு செல்லும் பிரதமர், கத்தார் அமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2023 ஆம் ஆண்டு கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு இந்திய கடற்படை வீரர்கள், அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.