PM Modi: பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் இந்தியா முன்னிலை..ஜி 20 சுற்றுச்சுழல் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
"காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் தெற்கில் உள்ள நாடுகள் குறிப்பாக பாதிக்கப்படுவதால், காலநிலை நடவடிக்கை உலகளாவிய தெற்கின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்"
ஜி-20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை தொடர்பான அமைச்சர்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி, பல்லுயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில் இந்தியா முன்னிலை வகிப்பதாக பெருமிதம் தெரிவித்தார். விளிம்புநிலை மக்களின் பொது நலனை உறுதி செய்யும் வகையில் காலநிலை நடவடிக்கை அமைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"பாரிஸ் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட உறுதிமொழிகள் மீது நடவடிக்கை தேவை"
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் தெற்கில் உள்ள நாடுகள் குறிப்பாக பாதிக்கப்படுவதால், காலநிலை நடவடிக்கை உலகளாவிய தெற்கின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஐநா காலநிலை மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட உறுதிமொழிகள் மீது நடவடிக்கை தேவை.
தெற்கில் உள்ள நாடுகள், அதன் வளர்ச்சி விருப்பங்களை காலநிலைக்கு ஏற்ற வகையில் நிறைவேற்ற உதவுவதில் இது முக்கியமானதாக இருக்கும்" என்றார்.
இந்தியாவின் சாதனைகளை விவரித்து பேசிய அவர், "2030 இலக்கை விட ஒன்பது ஆண்டுகள் முன்னதாகவே, புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து, இந்தியா மின்சாரத் திறனை அடைந்துள்ளது. இன்று, நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில், உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
2070க்குள் "நிகர பூஜ்ஜியத்தை" அடைவதற்கான இலக்கையும் நாங்கள் நிர்ணயித்துள்ளோம். சர்வதேச சோலார் அலையன்ஸ், CDRI மற்றும் தொழில் மாற்றத்திற்கான தலைமைக் குழு உள்ளிட்ட கூட்டணிகள் மூலம் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறோம். இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு.
"இந்தியாவின் முன்முயற்சிகள் மக்களின் பங்கேற்பால் இயக்கப்படுகின்றன"
பல்லுயிர் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் தேசம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. காந்திநகர் அமலாக்க சாலை வரைபடம் மற்றும் தளம் மூலம், காட்டுத் தீ மற்றும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அவசியத்தை உணர்ந்திருப்பீர்கள்.
முன்னோடி பாதுகாப்பு முயற்சியான புராஜெக்ட் டைகரிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதன் அடிப்படையில், கிரகத்தின் ஏழு புலி வகைகளை பாதுகாப்பதற்காக இந்தியா சமீபத்தில் 'சர்வதேச புலி கூட்டணி'யை தொடங்கியுள்ளது. புராஜெக்ட் டைகரின் விளைவாக, இன்று உலகில் உள்ள 70 சதவீத புலிகள் இந்தியாவில் காணப்படுகின்றன.
'ப்ராஜெக்ட் லயன்' மற்றும் 'ப்ராஜெக்ட் டால்பின்' ஆகிய பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் முன்முயற்சிகள் மக்களின் பங்கேற்பால் இயக்கப்படுகின்றன.
மிஷன் அம்ரித் சரோவர் ஒரு தனித்துவமான நீர் பாதுகாப்பு முயற்சி. இந்த திட்டத்தின் கீழ், 63,000 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் சுமார் ஒரு வருடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணி முற்றிலும் மக்களின் பங்கேற்பு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
எங்கள் "கேட்ச் தி ரெயின்" பிரச்சாரமும் சிறந்த முடிவுகளைக் காட்டியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் நீரைச் சேமிக்க, இரு லட்சத்து எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நீர் சேகரிப்பு உள் கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன" என்றார்.