PM Modi: சட்டம் ஒழுங்கு, அமைதிக்கு பெயர் பெற்றது உத்தரபிரதேசம் - பிரதமர் மோடி பெருமிதம்
வளர்ச்சிப் பாதையில் பயணிக்க நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் விரும்புவதோடு, வளர்ந்த இந்தியாவைக் காண அனைவரும் ஆவலோடு உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்
![PM Modi: சட்டம் ஒழுங்கு, அமைதிக்கு பெயர் பெற்றது உத்தரபிரதேசம் - பிரதமர் மோடி பெருமிதம் PM Modi inaugurates Uttar Pradesh Global Investors Summit 2023 in Lucknow PM Modi: சட்டம் ஒழுங்கு, அமைதிக்கு பெயர் பெற்றது உத்தரபிரதேசம் - பிரதமர் மோடி பெருமிதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/6f6da2c9a07d7b556ba6648517c8d9d11676038095913571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார். உலகளாவிய வர்த்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்து, முதலீட்டாளர் உத்தரப்பிரதேசம் 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
மாநாடு:
உலக நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வித்துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் உத்தரப்பிரதேச அரசின் முயற்சியாகவே, பிப்ரவரி 10-12ம் தேதி வரையிலான உத்தரப்பிரதேச சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2023 நடத்தப்படுகிறது. உலக நாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதுடன், நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பலப்படுத்துவதற்கும் இந்த மாநாடு வழிவகை செய்யும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பிரதமராகவும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களை வரவேற்றார்.
உத்தரப் பிரதேச பூமி, அதன் கலாச்சார சிறப்பு, புகழ்பெற்ற வரலாறு மற்றும் செழுமையான பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்றது. 5-6 ஆண்டுகளுக்குள் உத்தரப் பிரதேசம் புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இப்போது உத்தரப் பிரதேசம் நல்ல நிர்வாகம், சிறந்த சட்டம் ஒழுங்கு நிலைமை, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெயர் பெற்றுள்ளதுடன், வளத்தை உருவாக்குபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படுகின்றன என்று பிரதமர் கூறினார்.
உத்தரபிரதேசம் பிரகாசமான இடம்:
உ.பி.யில் சிறந்த உள்கட்டமைப்புக்கான முயற்சிகள் பலனளித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், 5 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உ.பி., விரைவில் அறியப்படும் என்றார். சரக்கு வழித்தடமானது மகாராஷ்டிராவின் கடற்கரையுடன் மாநிலத்தை நேரடியாக இணைக்கும். இன்று உ.பி., நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாக மாறியுள்ளது. உலக அரங்கில் இந்தியா ஒரு பிரகாசமான இடமாக மாறியது போல் உ.பி., தேசத்திற்கு ஒரு பிரகாசமான இடமாக மாறியுள்ளது
இந்திய சமுதாயம் மற்றும் இந்திய இளைஞர்களின் சிந்தனை காணப்படும் மிகப்பெரிய மாற்றத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சிப் பாதையில் செல்ல விரும்புவதாகவும், வரும் காலங்களில் ‘வளர்ந்த பாரதம் ’காண விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகத்தை வழங்கும் அரசுக்கு, இந்திய சமூகத்தின் விருப்பங்களே உந்து சக்தியாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது இந்தியா மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள் கட்டாயத்தால் அல்ல, மரபால்” என்று அவர் கூறினார்.
உத்தரபிரதேச வளர்ச்சி:
பட்ஜெட் பற்றி பேசிய பிரதமர், அடிப்படைக் கட்டமைப்புக்கு அதிகரிக்கும் ஒதுக்கீட்டை கோடிட்டு காட்டினார். இந்தியாவில் சுகாதாரம், கல்வி, சமூக கட்டமைப்பு ஆகியவற்றில் வாய்ப்புகள் இருப்பது பற்றியும் அவர் பேசினார். இந்தியா மேற்கொண்டுள்ள பசுமை வளர்ச்சி பாதையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் எரிசக்தி பரிமாற்றத்திற்காக மட்டும் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்ததாக அவர் கூறினார்.
இந்தியாவின் செல்பேசி தயாரிப்புகளில் உத்தரப்பிரதேசம் அதிகபட்சமாக 60 சதவீதத்தை பெற்றிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டின் இரண்டு பாதுகாப்புத் தொழில் துறை வழித்தடத்தில் ஒன்று, உத்தரப்பிரதேசத்தில் உருவாக்கப்படுவதாக அவர் கூறினார்.
பல்வேறு வகையான சாகுபடி பயிர்கள் பற்றி பேசிய பிரதமர், விவசாயிகளுக்கு கூடுதலான நிதியுதவி கிடைப்பது பற்றியும், இடுபொருட்கள் விலை குறைந்து இருப்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
இரட்டை அரசு:
இரட்டை அரசின் நடவடிக்கைகளால், உத்தரப்பிரதேச மாநிலம் மாபெரும் வளர்ச்சி கண்டிருப்பதாகக் கூறினார். எனவே செழிப்பின் அங்கமாக மாறுவதற்கு முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் இனி ஒரு நிமிடத்தையும் வீணாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட பிரதமர், உலகின் செழிப்பு இந்தியாவின் செழிப்பில் அடங்கியிருக்கிறது. எனவே, உங்களுடைய பங்களிப்பு இந்தியாவின் செழிப்பின் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை தலைவர்கள் உரையாற்றினார்கள். வளர்ந்த நாடாக இந்தியா உருவாவதற்கான அடித்தளத்தை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அமைத்துள்ளதாக முகேஷ் அம்பானி கூறினார். மூலதன செலவிற்கான அதிக ஒதுக்கீடு, மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்கு வித்திடும் என்றார். பிரதமர் தலைமையின் கீழ் நாடு மிகப் பெரும் மாற்றத்தை சந்தித்திருப்பதாகவும், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, துணிச்சலான புதிய இந்தியா தற்போது வடிவம் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக இந்தியாவை உயர்த்தும் நிலையை பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை உருவாக்கி இருப்பதாக டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் கூறினார்.
இந்தியாவில் விற்பனை செய்யும் சுமார் 65% செல்பேசிகள், உத்தரப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இம்மாநிலத்தை உற்பத்தி முனையமாக மாற்றியதில் உத்தரப்பிரதேச மாநில அரசின் ஆற்றல் வாய்ந்த கொள்கைகள் முக்கிய காரணம் என்றும் டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் வச்சானி கூறினார். சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்பேசிகளை ஏற்றுமதி செய்ய தற்போது டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் வளர்ந்து வரும் வாய்ப்புகளுக்கு தொழில்துறை தலைவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)