மோடியின் கல்வி தகுதி குறித்து அவதூறு பரப்பினாரா கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் அதிரடி!
மோடியின் கல்வி தகுதி தொடர்பாக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
பிரதமர் மோடியின் கல்வி தகுதி தொடர்பாக அவதூறு பரப்பியதாக தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
பிரதமர் மோடியின் கல்வி தகுதி தொடர்பாக தொடர் சர்ச்சை நீடித்து வருகிறது. கடந்த 1978ஆம் ஆண்டு, பிரதமர் மோடி இளங்கலையில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுதிறது. ஆனால், அவர் பட்டம் பெறவே இல்லை என சர்ச்சை எழுந்தது.
சர்ச்சையை கிளப்பும் மோடியின் கல்வி தகுதி:
இதை தொடர்ந்து, 1978ஆம் ஆண்டு பி.ஏ. படித்த அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் அவர்களின் பெயர், எண் ஆகியவற்றையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரவிந்த் கெஜ்ரிவால் கோரி இருந்தார்.
ஆனால், கேட்கப்பட்ட தகவல் மூன்றாம் தரப்பினருடையது எனக் கூறி அதை அளிக்க டெல்லி பல்கலைக்கழகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.
இதுகுறித்து மத்திய தகவல் ஆணையம், கேட்கப்பட்ட தகவல்களை வழங்கமாறு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம் 2017ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு?
முதல் விசாரணையிலேயே, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையே, பிரதமர் மோடியின் பட்டம் தொடர்பான விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பித்த உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், விவரங்களை கேட்டு வழக்கு தொடர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் மீது குஜராத் பல்கலைக்கழக பதிவாளர் பியூஷ் படேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்கில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். அவரின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடினார் கெஜ்ரிவால்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என் பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.