NEET OBC reservation: ’ஓபிசிக்கு கொடுத்தா பொதுப்பிரிவுக்கு எங்க?’ - நீட் இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசுட் மற்றும் நாகரத்னா தலைமையிலான அமர்வு வருகின்ற 6 அக்டோபருக்குள் மத்திய அரசில் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
நீட் மருத்துவத் தகுதித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அனைத்திந்திய கோட்டாவில் 27 சதவிகித இடஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் மத்திய அரசு 2 வாரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம். உத்தரவிட்டுள்ளது.
நீட் மருத்துவத் தகுதித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகிதமும் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 10 சதவிகிதமும் இடஒதுக்கீடு செய்து அண்மையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த இரண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ‘அப்போது பொதுப்பிரிவினர் என்ன செய்வார்கள்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசுட் மற்றும் நாகரத்னா தலைமையிலான அமர்வு வருகின்ற 6 அக்டோபருக்குள் மத்திய அரசில் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மற்றொரு மனுவில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கான நீட் ஒதுக்கீட்டுக்கான வரையறையாக 8 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் டாகடர் மது கவிஷ்வர் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
முன்னதாக,பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள பரிந்துரைகளை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட போது, அதனை நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது மனுதாரரான திமுக.
சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் மத்திய அரசு நீட் தேர்வின் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் உடனடியாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் எனவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு குறித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை விசாரித்த போது, அதனைத் தேவையற்றது எனக் கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் நீட் தேர்வின் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டிருந்த போது, அதனின் நிர்வாக எல்லைக்கு அப்பாற்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த அமர்வு குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்றம் தவறிழைத்துள்ளதாகவும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.