"எங்க ஃபோன் கால்ஸ் ஓட்டுக்கேட்கப்படுது.. அப்புறம்..” : போராடும் மல்யுத்த வீரர்கள் பகீர் குற்றச்சாட்டு
டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் 2 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் 2 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 3 மாதங்களுக்கு பின்னர், மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியில் இருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வீரர் பஜ்ரங் புனியா தங்களுக்கு இது ஒரு கறுப்பு நாள் என்று கூறினார்.
அவர் கூறியதாவது: "இன்று (வியாழக்கிழமை) நாங்கள் எங்கள் போராட்டத்தின் கறுப்பு தினமாக கடைபிடிக்கிறோம். நாங்கள் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். எங்களுடன் ஒட்டுமொத்த தேசமும் இருக்கிறது. நாளுக்கு நாள் எங்களின் போராட்டத்திற்கு வலு சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும். ஆனால், சமீப நாட்களாக எங்களின் தொலைபேசி எண்கள் ட்ராக் செய்யப்படுகின்றன. எங்களை ஏதோ குற்றவாளிகள் போலவே நடத்துகின்றனர். எங்களை மட்டுமல்ல எங்களுடன் தொடர்புள்ளவர்களையும் இதுபோலவே நடத்துகின்றனர்" என்றார்.
சர்ச்சை என்ன?
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், அன்ஷூ மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, பஜ்ரங் புனியா, வினேஷ் போகர் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் ஜன.18ஆம் தேதி காலை இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் ஏற்பட்ட பாலியல் சர்ச்சையை குறித்த விசாரணையை மேற்பார்வையிட 5 பேர் கொண்ட குழு மத்திய அரசு அமைத்தது.
மேற்பார்வை குழுவின் தலைவராக மேரி கோம் இருக்கிறார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், தயான்சந்த் விருது பெற்ற திருப்தி முர்குண்டே, சாய் உறுப்பினர் ராதிகா ஸ்ரீமன், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் ராஜகோபாலன் (ஓய்வு) ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. இந்நிலையில் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். அவர்கள் உச்ச நீதிமன்றத்தையும் நாடினர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ய இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும் படி டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று கோரி தொடர்ந்து போராட்டத்தில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங், தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களுக்கு கவிதை மூலம் பதிலளித்தார். ”இந்த நேரத்தில் எனக்கு ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. வாழ்க்கையின் நஷ்டத்தையும் ஆதாயத்தையும் கணக்கிடுவதில் நான் இறங்கும் நாள், போராட்டங்களை சமாளிக்கும் திறன் குறையும் நாள், வாழ்வின் இயலாமை என்மீது இரக்கம் காட்டும் நாள், அந்த நாளன்று வாழ்வைவிட இறப்பு முன்னால் நிற்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.