Paytm FASTag: வாகன ஓட்டிகளே! நாளை மறுநாளே பேடி எம் ஃபாஸ்டேக்கிற்கு கடைசி - அப்போ என்ன பண்றது?
சுங்கச் சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகள் தங்களது பேடி எம் ஃபாஸ்டேக் வங்கியை நாளை மறுநாளுக்குள் வேறு வங்கிக்கு மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிரபல இணையதள பணப்பரிவர்த்தனை செயலியாகவும், பணப்பரிவர்த்தனை இணையதளமாகவும் விளங்குவது பேடி எம். கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட பேடி எம் பேமெண்ட்ஸ் வங்கி மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து, பேடி எம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரியளவில் குறைந்துள்ளது.
பேடி எம் ஃபாஸ்டேக்:
நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடி எம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடி எம் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்கள் வேறு வங்கிக்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
நாளை மறுநாளே கடைசி:
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்யவும், சுங்கச்சாவடிகளில் சிரமத்தைத் தவிர்க்கவும், பேடி எம் ஃபாஸ்டேக் பயனர்கள் 2024 மார்ச் 15-ம் தேதிக்கு முன்னர் மற்றொரு வங்கியால் வழங்கப்பட்ட புதிய ஃபாஸ்டேக்-கை வாங்கிப் பயன்படுத்துமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது அபராதம் அல்லது இரட்டை கட்டணங்களைத் தவிர்க்க உதவும்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்கள் 2024 மார்ச் 15-க்குப் பிறகு தங்களது கணக்கில் ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ முடியாது. இருப்பினும், அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பிறகு, டோல் செலுத்த தங்களிடம் தற்போது இருக்கும் இருப்பைப் பயன்படுத்தலாம்.
பேடிஎம் ஃபாஸ்டக் (Paytm FASTag) தொடர்பான கூடுதல் சந்தேகங்கள் அல்லது உதவிகளுக்கு, பயனர்கள் வங்கிகளை அணுகலாம் அல்லது தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனமான ஐ.ஹெ.எச்.எம்.சி.எல்.-லின் (IHMCL) இணையதளத்தில் கேள்வி பதில் பகுதியைப் பார்க்கலாம். நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்ய அனைத்து பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்கள் உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் தங்களது ஃபாஸ்டேக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி வருகின்றனர்.