ECI Voter SIR: பீகாரில் பல் இளித்த லிஸ்ட்.. பேன் இந்தியாவிற்கு பிளான் போட்ட தேர்தல் ஆணையம் - அக்., ஆரம்பமா?
ECI Voter SIR: நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள, இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாம்.

ECI Voter SIR: நாடு முழுவதுமான சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேன் இந்தியா வாக்காளர் பட்டியல் திருத்தம்:
நடப்பாண்டின் இறுதியில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ள, இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, புதிய நடவடிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைவதற்கு முன்பாகவே வெளியாகும் என கூறப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஆரம்பகட்ட பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் வாயிலாக நாடு முழுவதுமான சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக நடைபெற உள்ள இந்த திருத்தப் பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வாக்காளர்களுக்கான சான்றுகள்:
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருத்தப் பணிகளுக்கான பயிற்சி மற்றும் தளவாடங்கள் குறித்து பிரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களைச் சரிபார்ப்பதற்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு மாநில தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிராந்தியங்களுக்கு இடையே வேறுபடும் உள்ளூரில் விநியோகிக்கப்படும் மற்றும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை கணக்கில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உதாரணமாக, பழங்குடிப் பகுதிகள், வடகிழக்கு மற்றும் கடலோர மாநிலங்களில், தன்னாட்சி கவுன்சில்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பெரும்பாலும் அடையாளம் மற்றும் வசிப்பிடத்திற்கான செல்லுபடியாகும் சான்றாகக் கருதப்படுகின்றன.
தேர்தல் ஆணையம் Vs எதிர்க்கட்சிகள்:
பிறந்த இடத்தை சரிபார்ப்பதன் மூலம் சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகளை ஒழிப்பதே இந்த தீவிர திருத்தத்தின் முதன்மையான நோக்கமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக வீடு வீடாகச் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். அதேநேரம், பாஜகவுக்கு பயனளிக்கும் வகையில் வாக்காளர் பட்டியல்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் தேர்தல் ஆணையம் கூடுதல் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று, வேறு மாநிலத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் சேர அல்லது இடம் மாற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான புதிய அறிவிப்பு படிவம் ஆகும்.
பீகாரில் பல் இளித்த "SIR"
பீகாரில் அண்மையில் அரங்கேறிய சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியானது, பெரும் சர்ச்சையாக வெடித்தது. உரிய ஆவணங்கள் இல்லை என கூறி 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை செல்ல, எந்தவொரு தகுதியுள்ள குடிமகனும் விலக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களையும் மீண்டும் பட்டியலில் சேர்க்க சொன்னதோடு, தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுத்த ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள சான்றுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும் உத்தரவிட்டது. இப்படி பீகாரில் பெரும் சர்ச்சைக்குள்ளான SIR நடவடிக்கையை தான், தற்போது நாடு முழுவதும் செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.






















