Pahalgam Terror Attack: ஒட்டும் இல்லை உறவும் இல்லை! இந்தியாவின் அடுத்த அதிரடி முடிவு.. நெருக்கடியில் பாகிஸ்தான்
Pakistan: தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையைக் காரணம் காட்டி, பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இறக்குமதிக்கு தடை:
"பாகிஸ்தானில் இருந்து உருவாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை, இலவசமாக இறக்குமதி செய்யக்கூடியதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது வேறுவிதமாக அனுமதிக்கப்பட்டாலும், நேரடி அல்லது மறைமுகமாக இறக்குமதி செய்வது அல்லது கொண்டு செல்வது என அனைத்து விதமான ஏற்றுமதிக்கும் மறு உத்தரவு வரும் வரை உடனடியாக தடைசெய்யப்படும்" என்று வர்த்தகம் மற்றும் வணிக அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையின் நலனுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு எந்தவொரு விதிவிலக்கும் இந்திய அரசின் முன் ஒப்புதல் பெற வேண்டும்" என்று சுற்றறிக்கை மேலும் கூறுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பத்து நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை, இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அறியப்படும் நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் அனைத்து விசாக்களையும் நிறுத்தி வைப்பது, தூதரகத்தின் எண்ணிக்கையைக் குறைப்பது, இராணுவ அதிகாரிகளை வெளியேற்றுவது மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது ஆகியவை அடங்கும்.
இதன் வரிசையில் தற்போது இறக்குமதி தடை என்பதை இந்திய அரசாங்கம் அமல்ப்படுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகம்
2023–24 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிகர வர்த்தக மதிப்பு ரூ.3,886.53 கோடியாக இருந்தது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பொருட்களுக்கு இந்தியா 200% வரி விதித்தபோது பாகிஸ்தானின் வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்தித்தது.
இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கை பாகிஸ்தானை கடுமையாக பாதிக்கும், ஏனெனில் அதன் நிகர வர்த்தக மதிப்பு ஏற்கனவே எதிர்மறையாக உள்ளது மற்றும் வெளிநாட்டுக் கடன் $22 பில்லியனாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், இந்தியா-பாகிஸ்தான் சுமார் $2 பில்லியனாகக் குறைந்துள்ளது.
பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை
கூடுதலாக, பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் நிறுத்துவதை இந்தியா தடை செய்துள்ளது. கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "பாகிஸ்தானின் கொடியைத் தாங்கிய எந்தவொரு கப்பலும் எந்த இந்திய துறைமுகத்திற்கும் செல்ல அனுமதிக்கப்படாது." மேலும், இந்திய கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள எந்த துறைமுகத்திற்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லைகளும் வான்வெளிகளையும் இரு நாடுகளும் ஏற்கெனவே மூடிய நிலையில், கப்பல்கள் மீதான தடையுடன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து வர்த்தகமும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.






















