Sonu Sood | ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்த அருந்ததி வில்லன் சோனு சூட்.. ஐடி தகவல்!
சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தது வருமான வரித்துறையினரின் சோதனை மூலம் தெரியவந்துள்ளது
பாலிவுட் பிரபல நடிகர் சோனுசோட் வீட்டில் சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் விடிய விடிய ரெய்டு நடத்தினர். ஊரார் அறிந்த சோனு சூடுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. சோனு சூடின் உறவினர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தது வருமான வரித்துறையினரின் சோதனை மூலம் தெரியவந்துள்ளது
இது குறித்து தெரிவித்துள்ள வருமான வரித்துறை, மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குருகிராமில் உள்ள 28 வளாகங்களில் இந்த ஐடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான பல சான்றுகள் கிடைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளனர்
சோனு சூட்:
பொம்மாயி என அடிவயிற்றிலிருந்து அருந்ததி படத்தில் வில்லன் நடிகர் கூப்பிடும் குரலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டோம். அருந்ததி படத்தின் வாயிலாகத் தான் நமக்கு சோனு சூட் அறிமுகமானார். அதேபோல் சந்திரமுகி படத்தில் கட்டுமஸ்தான உடல்பாங்குடன் ரஜினிகாந்துடன் அவர் போடும் சண்டையும் ரொம்பவே ஃபேமஸ்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கு அண்மைக்காலமாக அவர் சமூக சேவைக்காகவும் அறியப்படுகிறார். கொரோனா காலத்தில் அவர் அடிப்படை உதவிப் பொருட்களை வழங்கி கவனம் பெற்றார். அதுமட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் நாடு முழுவதும் ஆங்கானே போஸ்டர் ஒட்டி அவரைப் பிரபலப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி, பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, கிராமத்தில் மாணவர்களுக்கு ஒழுங்காக சிக்னல் கிடைக்க மொபைல் டவர் அமைத்தது என எண்ணற்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.
அண்மையில் கூட தன்னை காண 1,200 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த ரசிகருக்குச் செருப்பு வாங்கி கொடுத்து நடிகர் சோனு சூட் வழியனுப்பிய வைத்தார். இப்படி சேவைக்கு பெயர்போன சோனு சூட் வரி செலுத்தவில்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அரசியல் காரணமா?
சோனு சூட் தாராளமாக சமூக நல உதவிகளைச் செய்ய அவர் பாஜகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அண்மையில் டெல்லி அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்திற்கு சூனு சூட் நியமிக்கப்பட்டார். அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்த ஆம் ஆத்மி அரசு அவரை பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த அரசியல் பின்னணியின் காரணமாக அவர் வீட்டில் ரெய்டு நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பரவலாகவே, பாஜக தனக்கு வேண்டாதவர்கள் மீது சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவை ஏவி ரெய்டு நடத்துவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.