Flights Delay: பயணிகள் கவனத்திற்கு..! 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கியது - டெல்லி ATC-யில் சிக்கல்
Delhi Airport Flights Delay: டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 100-க்கும் அதிகமான விமானங்களின் சேவை முடங்கியது.

Delhi Airport Flights Delay: டெல்லி விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100+ விமானங்களின் சேவை பாதிப்பு:
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. இந்த மிகப்பெரிய தாமதத்தைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்து சீரான விமான சேவையை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக டெல்லி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய நிர்வாகம் விளக்கம்
விமானத் திட்டங்களை வழங்கும் ஆட்டோ டிராக் சிஸ்டத்திற்கான (AMS) தகவல்களை வழங்கும் தானியங்கி செய்தி மாறுதல் அமைப்பில் (AMSS), சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி விமான நிலைய ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதே விமான நிலையத்தில் விமான சேவைகள் தாமதங்களைச் சந்தித்து வருகின்றன. அதை விரைவில் தீர்க்க DIAL உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் எங்களின் குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்திய விமான அப்டேட்களுக்கு பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மனதார வருந்துகிறோம்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனங்கள் சொல்வது என்ன?
டெல்லி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் (ஏடிசி) சிக்கல் குறித்து தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்பைஸ்ஜெட் ஒரு அறிக்கையை வெளியிட்டது, "டெல்லியில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் (ஏடிசி) நெரிசல் காரணமாக, அனைத்து புறப்பாடுகள்/வருகைகள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் விமானங்கள் பாதிக்கப்படலாம். பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் விமானச் சேவைகள் இடையூறுகளை எதிர்கொள்வதாக இண்டிகோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி விமானச் சேவைகள் தற்போது தாமதங்களைச் சந்தித்து வருகின்றன. இதன் விளைவாக, டெல்லி மற்றும் பல வடக்குப் பகுதிகளில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஏர் இந்தியாவும் தாமதங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகள் அவதி
புதன்கிழமை மூன்றாம் தரப்பு (Third Party) kanektivitti நெட்வொர்க் சிக்கல் காரணமாக டெல்லி மற்றும் பல்வேறு விமான நிலையங்களில் ஏர் இந்தியாவின் செக்-இன் அமைப்புகள் சிக்கல்களை எதிர்கொண்டதை அடுத்து தற்போதைய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கு செல்லவும் திட்டமிட்டு இருந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்த விமானங்கள் தொடர்பான தகவல்களுக்கான காத்துக்கிடக்கின்றனர்.,






















