Rajeev Chandrasekhar : மத்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு.. மத்திய அமைச்சர் விளக்கம்..
மத்திய அரசின் மீதான டிவிட்டர் முன்னாள் செயல் அதிகாரியின் குற்றச்சாட்டுக்கு, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்
டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது ட்விட்டருக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அதன் முன்னாள் சிஇஓ ஜேக் டார்ஸி கூறி இருப்பது உண்மையல்ல என்றும், ட்விட்டர் இந்திய சட்டங்களை மீறி இருப்பதாகவும் மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜீவ் சந்திர சேகர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “’இது ஒரு அப்பட்டமான பொய் என்றும் டோர்சி மற்றும் அவரது குழுவினரின் கீழ் ட்விட்டர் வலைதளம் இயங்கி வந்தபோது இந்திய சட்டத்தை அவர்கள் மீறினர். 2020 முதல் 2022 வரை இந்திய சட்டத்திற்கு அவர்கள் இணங்கவே இல்லை என்றும் நமது அரசியல் அமைப்பு கூறப்பட்டுள்ள விதிகளை தொடர்ந்து மீறி வந்தனர். ஜேக் டார்ஸியின் தாக்குதல் என்னை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அவர் உண்மைக்கு மாறாக பேசி இருக்கிறார். அவர் பேசி இருப்பது பொய்யானது. தவறானது. இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சட்டப்பிரிவுகளான 14, 19, 21 ஆகியவற்றை ட்விட்டர் மீறியுள்ளது. ட்விட்டராக இருந்தாலும் வேறு எந்த சமூக வலைதளங்களாக இருந்தாலும் அவை இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக செயல்படக்கூடாது. இந்திய சட்டங்களை மீறக்கூடாது” இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
This is an outright lie by @jack - perhaps an attempt to brush out that very dubious period of twitters history
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) June 13, 2023
Facts and truth@twitter undr Dorsey n his team were in repeated n continuous violations of India law. As a matter of fact they were in non-compliance with law… https://t.co/SlzmTcS3Fa
மேலும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக விவசாயிகள் போராட்டத்தின்போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டிவிட்டர் நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என, இந்திய அரசு மிரட்டியதாக, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சி, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், வெளிநாட்டு அரசாங்கங்களால் நீங்கள் ஏதேனும் அழுத்தத்தை எதிர்கொண்டு இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இந்திய அரசின் மீது அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, ”விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், அரசாங்கத்தை விமர்சிக்கும் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களின் டிவிட்டர் கணக்குகள் தொடர்பாகவும் எங்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த நாடு இந்தியா. அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம் என கூறினர். டிவிட்டர் நிறுவன ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு விடுவோம் என்றார்கள், ஜனநாயக நாடான இந்தியாவில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன” என ஜாக் டோர்சி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.